களம் 2009ஐ நோக்கி திரும்புகிறதா?
வழக்கமாக, தமிழகத்தில், தேர்தல்களின் போது, யாருக்கு ஓட்டு போட வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்பதில் வாக்காளர் மத்தியில் ஒரு உறுதித்தன்மை இருக்கும். ஒரு தேர்தலில் அலைபோல் பெருவாரியான ஓட்டுகளை ஒரு கட்சிக்கு கொடுக்கும் மக்கள், அடுத்த தேர்தலில், கிழக்கே அடிக்கும் அலை மேற்கே திரும்பியது போல் எதிர்க்கட்சிக்கு அந்த ஓட்டுகளை கொடுப்பது, தமிழக தேர்தல்களில் ஒரு அம்சமாக இருந்து வருகிறது.
கடலுார் தொகுதியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கடந்த 2014ல், 49.42 சதவீத வாக்குகளோடு அ.தி.மு.க.,வை வெற்றிபெற செய்த வாக்காளர்கள், அடுத்த இடத்தை பிடித்த தி.மு.க., வேட்பாளருக்கு, 28.57 சதவீதம் தான் கொடுத்தனர். அதேபோல், கடந்த 2019ல் 50.27 சதவீத ஓட்டுகளோடு தி.மு.க.,வை வெற்றிபெற செய்தவர்கள், அடுத்த இடத்தை பிடித்த பா.ம.க.,விற்கு, 36.41 சதவீதம் தான் கொடுத்தனர். வெற்றி வேட்பாளர்கள், அடுத்து வந்தவர்களைவிட தெளிவான முன்னிலை பெற்று வெற்றி பெற்றனர்.
ஆனால், சவாலான அரசியல் சூழல் நிலவும்போது, வெற்றி பெறுவோரின் ஓட்டு சதவீதங்கள் குறைந்து விடுகின்றன அல்லது ஓட்டு வித்தியாசம் குறைந்து விடுகிறது. கடந்த 1998 மற்றும் 2009 லோக்சபா தேர்தல்கள் இப்படிப்பட்டவை. 1998ல் ஐக்கிய முன்னணி அரசு கலைந்து தேர்தல் வந்திருந்தது. மாநிலத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். தேசிய அரசியல் பற்றி ஒரு பக்கம் குழப்பம் இருந்தது.
அதேநேரம் மாநில அரசு மீது அதிருப்தியும் இருந்தது. அந்த தேர்தலில், கடலுார் மக்கள், 48.84 சதவீதத்தோடு அ.தி.மு.க., வேட்பாளரை வெற்றிபெற செய்தனர். ஆனால், அவருக்கு அடுத்த இடத்தில், த.மா.கா., (மூ) வேட்பாளர் 44.56 சதவீதத்தை பெற்றிருந்தார். ஓட்டு வித்தியாசம் வெறும் 4.28 சதவீத புள்ளிகள் தான். இந்த தேர்தலில் அ.தி.மு.க., 30 தொகுதிகளையும், தி.மு.க., 9 தொகுதிகளையும் கைப்பற்றின.
கடந்த 2009ல், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க ஓட்டு கேட்டு வந்தது. மாநிலத்தில் தி.மு.க., ஆட்சி இருந்தது. இப்போது போல, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளை அந்த ஆட்சி முடித்திருந்தது. மத்திய அரசின் மேல் ஓரளவிற்கு அபிமானமும் மாநில அரசின் மேல் அதிருப்தியும் இருந்தது. தி.மு.க., மத்தியில் ஆளும் காங்கிரசோடு கூட்டணி வைத்திருந்தது. அந்த சூழலில், கடலுார் மக்கள், காங்., வேட்பாளருக்கு, 42.81 சதவீதமும் அவருக்கு அடுத்து வந்த வேட்பாளருக்கு, 39.67 சதவீதமும் கொடுத்தனர். ஓட்டு வித்தியாசம் வெறும் 3.14 சதவீத புள்ளிகள் தான். இந்த தேர்தலில் தி.மு.க., 27 இடங்களையும், அ.தி.மு.க., 12 இடங்களையும் பிடித்தன.
இந்த தேர்தலும், கடந்த 1998, 2009 போல மக்களுக்கு குழப்பமான மனநிலையை தான் உருவாக்கி இருக்கிறது. தி.மு.க., மீது அதிருப்தி இருக்கிறது. ஆனால், மாற்றாக எதிரணி பலமாக இல்லை. அதனால், மக்களின் கோபம், பிரசாரங்களின் போது தி.மு.க., வேட்பாளர்களை திருப்பி அனுப்புவது, கேள்வி கேட்பது என வெளிப்பட்டு வருகிறது. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பரவலாக நடப்பது இதுவே முதல் முறை என்பதை கவனிக்க வேண்டும்.
கடந்த மார்ச் 16 தேர்தல் அறிவிப்புக்கு முன் தி.மு.க.,வே, 39 தொகுதிகளையும் வெல்லும் என்று பேச்சு இருந்த நிலை இன்று மாறியுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க கண்ணுக்கு தெரியாமல் தி.மு.க., மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எதிரணி பலம் இல்லாததால், தி.மு.க.,வை தேர்தலில் வீழ்த்த முடியாதோ என்ற விரக்தி வாக்காளர் மத்தியில் அதிகரித்து வருகிறது. தி.மு.க.,வினருமே இதை உணர்கின்றனர். முதல்வரின் பேச்சில் கூட தெரிய துவங்கிவிட்டது. முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் கடலுாரில் பேசும்போது, பழனிசாமியை பல்வேறு தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.
அதே நேரம், தி.மு.க.,வுக்கு சாதகமாக நான்கு விஷயங்கள் உள்ளன. ஒன்று, கூட்டணி பலம். இரண்டு, பெண்களுக்கான இலவச பஸ் பயணம். மூன்று, ஏழை பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் திட்டம். நான்காவது, பிரதமர் மோடி, பா.ஜ.,வை வலுவாக எதிர்க்கும் ஒரு பங்கு மக்களின் ஆதரவு.
தி.மு.க.,விற்கு எதிராக ஓட்டுப்போட விரும்புவோர் அ.தி.மு.க.,வா, பா.ஜ.,வா என, குழம்பி நிற்கின்றனர். தி.மு.க.,வை எதிர்க்க வேண்டும் என்றால், அ.தி.மு.க.,விற்கு தான் ஓட்டுப்போட வேண்டும் என்று பாரம்பரியமாக நம்பும் மக்கள் ஒரு பக்கம். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டோர். பா.ஜ., பக்கம் திரும்பியுள்ள மக்கள் இன்னொரு பக்கம். குறிப்பாக இளைஞர்கள். திராவிடமும் வேண்டாம், மோடியும் வேண்டாம் ஆனால், தி.மு.க.,வை எதிர்க்க வேண்டும் என்று நினைக்கும் மூன்றாவது எதிர்ப்பு தரப்பினரும் வலுப்பெற்று உள்ளனர். இவர்களின் கணிசமான ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது. அக்கட்சி கிட்டத்தட்ட 8லிருந்து 10 சதவீதம் அளவுக்கு ஓட்டு பெற்றாலும் ஆச்சரியமில்லை.
இதனால், தி.மு.க., சார்பாக இறுகி இருந்த களம், இப்போது நெகிழ்ந்து குழப்பமாக காட்சி அளிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், அனேக வெற்றி தொகுதிகளிலுமே தி.மு.க., கூட்டணிக்கு 30ல் இருந்து 35 சதவீதம் ஓட்டு மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகும். அதீத பா.ஜ., எதிர்ப்பு உள்ள டெல்டா மாவட்டங்களில் மட்டும் 40 சதவீதத்தை தாண்டும் நிலை இருக்கும் அல்லது பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் நிற்கும் இடங்களிலும், வேட்பாளர் தேர்வு வலுவாக இல்லாத இடங்களிலும், தி.மு.க., கூட்டணி 40 சதவீத அளவில் ஓட்டுகளை பெற வாய்ப்புள்ளது. எதிரணியில் ஏதேனும் ஒரு தரப்பு தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை காட்டிலும் சற்றே வலுவாக இருக்கும் தொகுதிகளில், வெற்றி வேட்பாளர்கள் முட்டி மோதிதான் வெற்றிபெறும் நிலை இருக்கும்.
இப்படிப்பட்ட சவாலான சூழலால் தேர்தல் களம் மிகவும் சுவாரசியமாக மாறியுள்ளது. உண்மையிலேயே அடுத்த ஒன்பது நாட்களில் நடக்கும் வேலைகளும் திருப்பங்களுமே, ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
வாசகர் கருத்து