தி.மு.க., பணநாயகத்தால் பா.ஜ.,வில் ஐக்கியம்
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன், கிணத்துக்கடவு, காட்டம்பட்டி, மன்றாம்பாளையம், வடசித்துாரில் பிரசாரம் மேற்கொண்ட போது, மன்றாம்பாளையம் தி.மு.க., கிளை துணை செயலர் மருதமுத்து தலைமையில், தி.மு.க.,வினர் 50 பேர், அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தனர்.
மருதமுத்து கூறியதாவது:
கிராமப்பகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், ஒன்றிய செயலரிடம் முறையிடுகிறோம். அவர், அதை சரி செய்யாவிட்டால் அடுத்த கட்டத்திலுள்ள நிர்வாகிகளிடம் தெரிவிப்போம்.
அறிவாலயத்துக்கு மனு அனுப்பினாலும், எந்த பயனும் இல்லை. உழைப்போருக்கு இங்கு முறையான அங்கீகாரம் இல்லை.
திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் கட்சி பொறுப்பு வழங்குவதில்லை. தி.மு.க.,வில் பொறுப்பு வேண்டுமானால், மாவட்டத்துக்கும், கட்சி தலைமைக்கும் பணம் கொடுத்தே ஆக வேண்டும். ஒன்றிய பொறுப்புக்கு 1 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.
மேலும், விருப்ப மனு வாங்கும் போது, யார் அதிக பணம் கொடுக்கின்றனரோ அவர்களுக்கே பதவி கிடைக்கிறது. சொல்லப் போனால் பணம் சம்பாதிக்க, பதவியை ஏலம் விடும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து