அருண் நேருவே திரும்பிப் போ : மண்ணை வாரி தூற்றிய நரிக்குறவர்கள்
பெரம்பலூர் தி.மு.க., வேட்பாளர் அருண் நேரு ஓட்டு கேட்டுச் சென்றபோது, நரிக்குறவ சமூக மக்கள் அவருக்கு சாபம் விடும் வீடியோ, இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
லோக்சபா தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அருண் நேரு, எறையூர் சர்க்கரை ஆலை நரிக்குறவர்கள் காலனிக்கு ஓட்டு கேட்க சென்றார். அப்போது அவருடன் பெரம்பலுார் எம்.எல்.ஏ., பிரபாகரனும் சென்றார்.
அப்போது, அங்கு வசிக்கும் நரிக்குறவ மக்கள், "ஊருக்குள்ள வரக் கூடாது. திரும்பிப் போ" என தி.மு.க.,வினரை நோக்கி கோஷம் எழுப்பினர். அப்போது பேசிய அவர்கள், "எம்.ஜி.ஆர்., எங்களுக்கு கொடுத்த இரண்டு ஏக்கர் நிலத்தை பறித்து, செருப்பு கம்பெனிக்கு கொடுத்த தி.மு.க., நாசமாக போக, மண்ணா போக' என்று மண்ணை வாரிவிட்டு சாபம் விட்டனர்.
இதனால் அங்கு நிலவரம் சரியாக இல்லாததால், வேட்பாளர் உள்ளிட்ட தி.மு.க.,வினர் அப்பகுதிக்குள் செல்லாமல் அடுத்த ஊருக்கு சென்றனர்.
இதுகுறித்து, நரிக்குறவர்கள் கூறியதாவது:
எங்கள் இனத்தை சேர்ந்த, 166 குடும்பத்தினருக்கு, கடந்த 46 ஆண்டுகளுக்கு முன்பு, எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் எறையூர் அரசு சர்க்கரை ஆலையின் அருகே, சுமார் 2 ஏக்கர் நிலம் வீதம் மொத்தமாக 333 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இதுவரை அந்த நிலத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை. பட்டா கேட்டு 1983 முதல் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். 2020 வரை அந்த நிலத்தில் மானாவாரி சாகுபடி செய்து வந்தோம். நாங்கள் நாடோடிகள் என்றும், அந்நிலத்தில் விவசாயம் நடக்கவில்லை என்றும் அதிகாரிகள் பொய்யான தகவலை அரசுக்கு தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், அந்த நிலத்தை பறித்த தி.மு.க., அரசு, பீனிக்ஸ் கோத்தாரி காலனி பூங்கா சிப்காட் தொழிற்சாலைக்கு கொடுத்துவிட்டது. அதனால் தான், சாபம் விட்டோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து