Advertisement

தி.மு.க., ஹிந்து விரோத நச்சு பாம்பு : எச்.ராஜா. சிறப்பு பேட்டி

ஏடாகூடமாக ஏகடியம் பேசும் திராவிட தலைவர்களுக்கும் கொதிநிலையை உண்டு பண்ணும் மதிநுட்பம் வாய்ந்தவர்; பேச்சினில் ஆத்திரம், கோபம் கொப்பளித்தாலும், அதில் கேலியும், கிண்டலும் இழையோட, ஆழமாக சிந்திக்க வைப்பவர்.

ஏற்றுக் கொண்ட சித்தாந்தத்தில் பற்றுறுதியும், தீவிரமும் காட்டி தொண்டர்களுக்கு பக்கபலமாக திகழ்பவர், மத்திய பா.ஜ., தலைவர்களின் எண்ணங்களுக்கு ஈடுகொடுத்து, வண்ணமும் வடிவமும் கொடுக்கும் திறன் படைத்தவர் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா. அவர் அளித்த சிறப்பு பேட்டி:

தமிழகத்தில், 3.70 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே இருந்த பா.ஜ., தற்போது 18 முதல் 20 சதவீதம் ஓட்டு பெறும் அளவுக்கு வளர்ந்துள்ளது என கருத்து கணிப்புகள் சொல்வது நம்ப முடியவில்லையே. எப்படி சாத்தியம்?



இது அதிசயமானதல்ல. திரிபுராவில் சென்ற முறை 1 சதவீத ஓட்டு, பூஜ்யம் எம்.எல்.ஏ., என இருந்த நிலையில், அடுத்த தேர்தலில் 40 சதவீதம் ஓட்டு, 46 எம்.எல்.ஏ., ஆனது எப்படி? மக்கள் மனதில் மாற்றம் ஏற்படும்போது இம்மாதிரி வளர்ச்சி சாத்தியமே. அடுத்து, 2019 வரை மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு கொண்டு வந்தது என பொய் பிரசாரம் செய்தனர்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில், மத்திய அரசின் திட்டங்கள், மோடி அரசு கொண்டுவந்த திட்டங்கள் தான் என்பது மக்களுக்கு புரியத் துவங்கிவிட்டது. விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் வங்கியில் வந்து விழுகிறது. ஜன்தன் யோஜனா திட்டத்தில், 50 கோடி வங்கிக் கணக்கு துவங்கியுள்ளோம். இவற்றை 'மோடி கணக்கு' என்கின்றனர். அதனால் கட்சி வளர்ந்துள்ளது.

அ.தி.மு.க., உறவு கெடுவதற்கு அண்ணாமலை காரணமா? இதனால் மூத்த தலைவர்களிடையே வருத்தம் உள்ளதாகக் கூறப்படுகிறதே?



தமிழகத்திலேயே 'சீனியர் மோஸ்ட் லீடர்' நான்தான். எனக்கு எந்த வருத்தமும் அண்ணாமலை மீது கிடையாது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், 'தி.மு.க., தீயசக்தி. எனவே தி.மு.க.,வை அழிக்க வேண்டும்' என்றனர். இதை ஏற்றுக்கொண்டவர்கள்தான் அ.தி.மு.க.,வில் உள்ளனர். இன்று அ.தி.மு.க., எடுத்துள்ள முடிவு தி.மு.க.,வுக்கு சாதகமான முடிவு என மக்கள் நினைக்கின்றனர். ஏனெனில் 2 அணிகளாக பிரிந்தால், தி.மு.க.,வுக்கு ஜெயிக்க வாய்ப்புள்ளதல்லவா? அதனால் அ.தி.மு.க., மீதுதான் மக்கள் கோபமாக உள்ளனர். அண்ணாமலை மீது யாருக்கும் கோபமில்லை.

பா.ஜ., கூட்டணியில் வலுவான கட்சிகள் சேர முன்வராதது அண்ணாமலையின் தேர்தல் வியூக குறைபாடாக கருதலாமா?



பா.ஜ.,வை விட்டு அ.தி.மு.க., விலகியதும்,. எங்களிடம் பல கட்சிகள் வருவர். நாங்கள் வலிமையான கூட்டணி அமைப்போம் என்றது. ஆனால் அ.தி.மு.க., பக்கம் தே.மு.தி.க., மட்டுமே சென்றது. ஆனால் பா.ஜ., பக்கம் ஏற்கனவே, 6 சதவீதத்திற்கு மேல் ஓட்டு நிரூபிக்கப்பட்ட பா.ம.க., வந்துள்ளது. அ.ம.மு.க., வந்துள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், வேலுாரில் 8,000 ஓட்டுகளில் வெற்றியை இழந்த ஏ.சி.சண்முகம் வந்துள்ளனர். ஐ.ஜே.கே., மற்றும் தேவநாதன் வந்துள்ளனர். 2014ல் எங்கள் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் வந்துள்ளன. ஆகவே வலிமையான கூட்டணி அமைத்தது பா,ஜ.,தான்.

தி.மு.க., நாங்கள் ஹிந்துக்களின் எதிரி இல்லை என்கிறது. 90 சதவீத தி.மு.க.,வினர் ஹிந்துக்கள்தான் என ஸ்டாலின் கூறுகிறார். அவர்களை அவ்வாறு சித்திரிப்பது பா.ஜ.,வின் தேர்தல் வியூகமா?



இப்போது தி.மு.க., நாங்கள் ஹிந்துக்கள்தான் என அலற வேண்டியுள்ளது. அந்த தி.மு.க.,வுக்கு என் கேள்வி... உச்ச நீதிமன்றமே, 'சனாதனம் என்பது ஹிந்துமதம்தான்' என்று கூறியுள்ளது. சனாதனத்தை டெங்கு, மலேரியா கொசு போல அழிப்பேன் என்ற உதயநிதியின் கூற்று, ஹிந்துக்களுக்கு எதிரான இனப்படுகொலை அழைப்பு இல்லையா? இனி தி.மு.க.,வை மக்கள் நம்ப வேண்டுமெனில், உதயநிதியையும், சேகர்பாபுவையும் மந்திரி சபையில் இருந்து நீக்கினால்தான் நம்புவர்.

சனாதனம் பற்றி உதயநிதி உள்ளிட்டோர் பேசியபோது, இதை தமிழக ஹிந்துக்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்ற கருத்து இருந்தது. அதை ஆமோதிக்கிறீர்களா? அல்லது தமிழக ஹிந்துக்கள் மத்தியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா?



இன்று 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் தி.மு.க., ஹிந்து விரோத நச்சுப்பாம்பு என புரிந்துகொள்ள துவங்கியுள்ளனர். இந்த புரிதல் திராவிட இயக்கங்களுடைய முடிவுக்கு வழிவகுக்கும்.

அடிக்கடி அவதுாறாக, வன்மத்தை துாண்டும் விதமாக பேசுவதாக ஐகோர்ட் உங்களைக் கண்டித்துள்ளது. நீங்கள் பேசியது பற்றி எப்போதாவது வருத்தப்படுகிறீர்களா?



நான் பேசியது குறித்து இன்னும் வழக்கு நடக்கிறது. என் மீது வழக்கு கொடுத்தது யார்? ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கம்தான். ஹிந்து அறநிலையத்துறை ஊழலைப் பற்றி எச்.ராஜா ஒரு இடத்தில் பேசியதற்கு, 28 இடங்களில் வழக்கு தொடுத்துள்ளனர். அதுபோல யாரையும் குறிப்பிடாமல் பதிவிட்ட 'எக்ஸ்'பதிவுக்கும் ஒரு வழக்கு நடக்குது. எனக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக இதில் உண்மையை உணர்ந்து ராஜா விடுதலை செய்யப்படுவார், என நினைக்கிறேன்.

அ.தி.மு.க., தலைவர்களுக்கும் அமலாக்க 'ரெய்டு' காத்திருக்கிறது என கடந்தாண்டு பேசினீர்கள். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. கூட்டணிக்காக காத்திருந்து தவிர்த்து விட்டதா மத்திய அரசு?



அமலாக்கத்துறை முன்னாள் சுகாதார துறை அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இருக்கிறது. அமலாக்கத் துறை நடவடிக்கையில் பா.ஜ.,வோ, மத்திய அரசோ தலையிடுவது கிடையாது. யார் உப்பைத் தின்கின்றனரோ, அவர்கள் தண்ணீர் குடிப்பர். யார் 'மணி லாண்டரிங்' செய்து இருக்கின்றனரோ, அவர்கள் அமலாக்கத் துறையின் வழக்குகளை சந்திப்பர்.

கருத்து சுதந்திரத்தை பா.ஜ., நசுக்குவதாக தி.மு.க., அடிக்கடி குற்றம் சாட்டுகிறது. வெளிநாட்டு பத்திரிகைகள் கூட அவ்வாறு எழுதியுள்ளன. பா.ஜ., ஆட்சி உண்மையில் பாசிச ஆட்சியா?



தங்கள் கருத்தை அடுத்தவர் மீது அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திணிப்பதுதான் பாசிசம். பா.ஜ., தன் கருத்தை யார் மீதும் திணிக்கவில்லை. எனவே எங்களை பாசிஸ்டுகள் என அழைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை. மாறாக இரண்டு சக்திகள்தான் உண்மையான பாசிஸ்டுகளாக உள்ளன.

ஒன்று திராவிட பாசிஸ்ட். ஏனெனில், 'யாரும் அவர்களை திட்டாத நிலையிலும், அழைக்காத நிலையிலும், கோவிலுக்கு போகிறவர்களைப் பார்த்து, கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி. வணங்குபவன் அயோக்கியன். நம்புகிறவன் முட்டாள்' என்று அவர்கள் பேசுவதுதான் பாசிசம். உங்கள் கருத்து உங்களோடு இருக்க வேண்டும். அதை கடவுளை நம்புவோர் மீது திணிக்க நினைப்பவரே பாசிஸ்டுகள்.

அடுத்து கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தம். ஏனெனில் வர்க்கப் போராட்டத்தில் ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை கொலை செய்கிறது. ரஷ்யா, சீனா, லெபனான் என எங்கெல்லாம் கம்யூனிசம் வந்ததோ அங்கெல்லாம் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட பின்புதான் கம்யூனிச ஆட்சி வந்தது. ஆகவே தங்கள் சித்தாந்தத்தை மக்களை கொலை செய்வதன் மூலம் திணித்த பாசிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள்.

1975ல் தன் நாற்காலிக்கு ஆபத்து வந்ததால் நெருக்கடி நிலையை அறிவித்து பார்லிமென்டின் காலத்தை நீட்டித்து, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் கைது செய்த காங்கிரசாரை விட சர்வாதிகாரி, பாசிஸ்ட் யாராவது உண்டா? அதோடு கூட்டு வைத்துள்ள இவர்கள்தான் ஜனநாயக விரோதிகள்.

தி.மு.க.,வினரால் பிரதமருக்கு எதிராக பொய் பிரசாரம் செய்ய முடிகிறது என்பதே, நாங்கள் ரொம்ப மென்மையாக இருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.

இந்த முறை நீங்கள் சிவகங்கையில் போட்டியிடாததற்கு என்ன காரணம்?



இம்முறை சிவகங்கையில் மட்டுமல்ல... தேர்தலிலேயே என்னால் நிற்க முடியாது. ஏனெனில் எனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. இப்போதும் மாலை நேரங்களில் அரங்க கூட்டங்களில் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறேன். என்னால் நாள் முழுதும் பிரசாரம் செய்ய முடியாது. அதனால் ஆரோக்கியம் காரணமாக இம்முறை தேர்தலில் நிற்கவில்லை, அவ்வளவுதான்.

தமிழகம் இன்று சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை என்ன? இத்தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தால் அந்தப் பிரச்னைகள் தீருமா?



மிகப்பெரிய பிரச்னை ஊழல் ஆட்சி. ஒவ்வொரு அமைச்சர் மீதும் பா.ஜ, மாநில தலைவர் அண்ணாமலை சொத்துப் பட்டியலையே கொடுத்துள்ளார். பல அமைச்சர்கள், எம்.பி.,க்கள் வழக்குகளை சந்திக்கின்றனர். முதலில் வளர்ச்சிக்கு தடையானது ஊழல். இரண்டாவது தமிழகத்தில் தேசிய நதிகள் இணைப்பு. விவசாயிகளுக்கு பாசன நீர் வேண்டும். அதற்கு நதிகள் மாநில பட்டியலில் இருப்பது தடையாக உள்ளது. இதுகுறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இன்று முக்கிய பிரச்னையாக பேசப்படுவது, காங்கிரஸ், தி.மு.க.,வின் கூட்டுச் சதி மூலம் மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதற்கு கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். இம்மாதிரி பிரச்னைகள் தமிழக மக்கள் முன்பு பிரதானமாக இருக்கின்றன. இன்று தேர்தல் நடப்பது மத்திய ஆட்சிக்காக. இத்தேர்தல் மூலம், 2026ல் பா.ஜ., தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்பதை நிரூபிப்பதாக இது அமையும். தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் 2026ல் நல்லாட்சி தருவோம்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்