Advertisement

தர்மபுரியில் சவுமியாவுக்கு எதிராக களப்பணி விரும்பாத காங்கிரஸ் தலைவர் தூக்கியடிப்பு

தர்மபுரி தொகுதி பா.ம.க., வேட்பாளர் சவுமியா அன்புமணிக்கு எதிராக, காங்., மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான தீர்த்தராமன், தேர்தல் பணி செய்ய விரும்பாததால், கரூர் மாவட்டப் பொறுப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

தர்மபுரி தொகுதியில் பா.ம.க., வேட்பாளராக போட்டியிடும் சவுமியாவுக்கு எதிராக, தி.மு.க., வேட்பாளர் ஆ.மணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அத்தொகுதியில் தி.மு.க., - பா.ம.க., இடையே நேரடி போட்டி நிலவுகிறது. சவுமியா வென்றால், அவருக்கு மத்திய அமைச்சர்பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்றகட்டாயத்தில் உள்ளனர்.

எனவே, தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகளுக்கு, அன்புமணி தரப்பில் வலை வீசப்பட்டுள்ளது.

'நான் எம்.பி.,யானால், காவிரி தர்மபுரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவேன்' என்ற உறுதிமொழியை சவுமியா கொடுத்துள்ளார். தர்மபுரி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, அவர் வெற்றி பெற வேண்டும் என, காங்கிரஸ் கட்சியில் உள்ள வன்னியர் சமுதாய நிர்வாகிகள் விரும்புகின்றனர்.

அதோடு, வாக்குறுதி கொடுக்கும் அவரால் மட்டுமே அப்பிரசனையை தீர்க்க முடியும் என்றும் நம்புகின்றனர்.

இதற்கிடையில், இதே காரணத்தை வலியுறுத்தி, தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள்எம்.பி.,யுமான தீர்த்தராமன், சவுமியாவுக்கு எதிராக, தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்ய விரும்பவில்லை.

இந்தத் தகவல் தெரிய வந்ததும், அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம், தீர்த்தராமன் மீது அதிருப்தி அடைந்தார். சமீபத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், முன்னாள் தலைவர் தங்கபாலு ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் தீர்த்தராமன் பங்கேற்கவில்லை.

இந்தத் தகவல் அமைச்சர் பன்னீர்செல்வம் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் வரை கொண்டு செல்லப்பட்டது. இந்த விஷயத்தில் தன்னுடைய அதிருப்தியை காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் கொண்டு சென்றார்.

அதையடுத்து, கரூர் லோக்சபா தொகுதிக்கு தீர்த்தராமன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அவரை கரூர் செல்ல வைத்துள்ளனர்.

இதேபோல பல மாவட்டங்களில் இருக்கும் காங்., முக்கிய தலைவர்கள் பலரும் பல்வேறுவிதங்களில் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். அதை சரிகட்ட விரும்பிய தமிழக காங்., தலைமை, அதிருப்தியில் இருக்கும் பலரையும் கட்சி போட்டியிடும் பல தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது.

தர்மபுரி தேர்தல் பொறுப்பாளராக, முன்னாள் மாவட்ட தலைவர் சிற்றரசு, டி.ஏ.அசோகன், வழக்ககறிஞர் மோகன் ஆகிய மூவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அந்தவட்டாரங்கள் கூறின.

காங்கிரசின் 9 தொகுதிக்கு பொறுப்பாளர் நியமனம்

தமிழகத்தில் காங்., போட்டியிடும் ஒன்பது தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நியமித்துள்ளார். திருநெல்வேலி- முன்னாள் எம்.பி., தங்கபாலு, கடலுார் முன்னாள் எம்.பி., எம்.கிருஷ்ணசாமி, மயிலாடுதுறை முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, விருதுநகர் முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஆர்.ராமசாமி, கன்னியாகுமரி முன்னாள் எம்.பி., எஸ்.எஸ்.ராமசுப்பு, கிருஷ்ணகிரிக்கு பொது செயலர் தணிகாசலம், திருப்பூர் வடக்கு தலைவர் பி.கோபி, சிவகங்கைக்கு காங்., துணை தலைவர் எம்.என்.கந்தசாமி, கரூர் முன்னாள் எம்.பி., பி.தீர்த்தராமன், திருவள்ளுர் - தனிதுணை தலைவர் எஸ்.எம்.இதயதுல்லா, காங்., செயலர் துரை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்