எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், தனித்து களம் இறங்கும், நாம் தமிழர் கட்சியின் ஓட்டு சதவீதம், தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருகிறது. கடந்த தேர்தலை விட, இந்த தேர்தலில், 13.79 லட்சம் ஓட்டுகளை கூடுதலாக பெற்றுள்ளது.
தமிழகத்தில், மிகப்பெரிய கட்சிகளாக கருதப்படும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தனித்து போட்டியிட முன்வருவதில்லை. ஆட்சி கைக்கு எட்டாமல் போய் விடுமோ என்ற பயத்தில், பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே, தேர்தலை சந்தித்து வருகின்றன.
கணிசமான ஓட்டுகள்
நாம் தமிழர் கட்சி, எவ்வித சமரசத்துக்கும் இடம் அளிக்காமல், தனித்தே களம் இறங்கி வருகிறது. 2016 சட்டசபை தேர்தலில், 4.59 லட்சம் ஓட்டுகளை மட்டும் பெற்றது. அதாவது, தேர்தலில் பதிவான ஓட்டுகளில், 1.06 சதவீதம் பெற்றிருந்தது.அடுத்து, 2019 லோக்சபா தேர்தலில், தனித்து களம் இறங்கி, 16.64 லட்சம் ஓட்டுகளை பெற்று, தன் ஓட்டு சதவீதத்தை, 3.98 சதவீதமாக அதிகரித்தது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,- - தி.மு.க.,- - அ.ம.மு.க.,- - ம.நீ.ம., என, நான்கு கூட்டணிகள் மத்தியில், நாம் தமிழர் கட்சி தனித்து களம் இறங்கியது.யாரும் எதிர்பார்க்காத வகையில், அனைத்து தொகுதிகளிலும், கணிசமான ஓட்டுகளை பெற்றுள்ளது. மொத்தம், 30 லட்சத்து, 43 ஆயிரத்து, 657 ஓட்டுகளைப் பெற்று, மாநிலத்தில், மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலை விட, 13.79 லட்சம் ஓட்டுகளை, கூடுதலாக பெற்றுள்ளது. சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 48 ஆயிரத்து, 597 ஓட்டுகளை பெற்றார்.அவரது கட்சியின் வேட்பாளர்கள், ஆவடி, சோழிங்கநல்லுார், துாத்துக்குடி தொகுதிகளில், 30 ஆயிரம் ஓட்டுக்கு மேல் பெற்றுள்ளனர்.
செங்கல்பட்டு, மாதவரம், பூந்தமல்லி, திருவாரூர் தொகுதிகளில், 25 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.முறையான கட்டமைப்புமேலும், 14 தொகுதிகளில், 20 ஆயிரம் ஓட்டுகளுக்கு அதிகமாகவும்; 36 தொகுதிகளில், 15 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேலாகவும்; 106 தொகுதிகளில், 10 ஆயிரம் ஓட்டுக்கு கூடுதலாகவும் பெற்றுள்ளனர். இந்த ஓட்டுகள் தான், அ.தி.மு.க., வெற்றிக்கு பாதிப்பை தந்துள்ளன.
முறையான கட்டமைப்பை ஏற்படுத்தினால், நாம் தமிழர் கட்சி, வரும் தேர்தல்களில், சாதனை படைக்க வாய்ப்புள்ளது.தமிழகத்தில், 234 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி, 172 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்தது. ம.நீ.ம., 34 இடங்களில், மூன்றாவது இடமும், கோவை தெற்கில், இரண்டாவது இடமும் பெற்றது. அ.ம.மு.க., 22 இடங்களில், மூன்றாவது இடமும், கோவில்பட்டியில் மட்டும் இரண்டாவது இடமும் பிடித்தது.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து