'ஈ.வெ.ரா., மண்' என்று கூறப்படும், ஈரோடு மாவட்டத்தில், தி.மு.க.,வின் மூத்த பெண் தலைவரை வீழ்த்தி, பா.ஜ., வெற்றி பெற்றது, அக்கட்சியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'தமிழகம் திராவிட பூமி; தண்ணீரில் தாமரை மலரலாம், தமிழகத்தில் ஒரு நாளும் தாமரை மலராது' என, திராவிட கட்சியினர், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
கண்டுகொள்ளவில்லை
இந்த சூழ்நிலையில், இந்த சட்டசபை தேர்தலில், எப்படியும் வெற்றிபெற்று, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்குள் சென்றாக வேண்டும் என, பா.ஜ., தேசிய தலைமை, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து, பா.ஜ., நிர்வாகிகள், மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே, தேர்தல் பணிகளை துவக்கினர். அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, 20 தொகுதிகளை பா.ஜ., பெற்றது.
கேட்ட தொகுதிகள் கிடைக்காத போதும், கிடைத்த தொகுதிகளில் வெற்றி பெற போராடியது. பா.ஜ.,வுக்கு கிடைத்த தொகுதிகளில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி முக்கியமானது. இத்தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக, பா.ஜ., இளைஞர் அணி தேசிய துணைத் தலைவர் முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.ஈரோடு மாவட்டத்தில், பா.ஜ.,வுக்கு செல்வாக்கு கிடையாது. எனவே, மொடக்குறிச்சியில் பா.ஜ., வெற்றி பெற இயலாது என்றே, அனைவரும் கருதினர். மேலும், தி.மு.க., சார்பில், மூத்த தலைவரான, சுப்புலட்சுமி ஜெகதீசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். எனவே, வெற்றி உறுதி என, தி.மு.க.,வினர் நம்பினர்.
பா.ஜ., வெற்றி பெற, வாய்ப்புள்ள தொகுதிகளாக, நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை தெற்கு, ஆயிரம் விளக்கு, தாராபுரம் ஆகியவற்றையே, பா.ஜ., நிர்வாகிகள் நம்பினர். மொடக்குறிச்சியை கண்டுகொள்ளவில்லை.இந்த சூழ்நிலையில், ஈ.வெ.ரா., பிறந்த ஈரோடு மாவட்டத்தில், பா.ஜ.,வை வெற்றி பெற வைக்க வேண்டும் என, முருகானந்தம் தலைமை யிலான குழுவினர், அமைதியாக தேர்தல் பணிகளை துவக்கினர்.
பா.ஜ., காலுான்றாத கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும், தேர்தல் பணியாற்றியதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், முருகானந்தம் பல்வேறு வியூகங்களை அமைத்தார்.
ஒத்துழைப்பு
முதலில், கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளை இழுக்க, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி, தங்களுக்கு ஒத்துழைக்க வைத்தார். அதன்பின், தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகளை வளைத்து, அமைதியாக இருக்க வழி செய்தார். இதற்கு பலன் கிடைத்து உள்ளது.யாருமே எதிர்பாராத வகையில், மொடக்குறிச்சி தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சரஸ்வதி, 281 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளரை வீழ்த்தி, ஈ.வெ.ரா., பிறந்த மண்ணில் தாமரையை மலர செய்துள்ளார்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து