Advertisement

சீக்ரெட் கார்னர்

களத்துக்கு வர மறுப்பு!

கர்நாடக மாநிலத்தை ஒட்டிய தொகுதியில் கை கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு, சொந்த கட்சியில் முழு ஒத்துழைப்பு இல்லையாம். தொகுதியை எதிர்பார்த்த முன்னாள் எம்.பி., முரண்டு பிடிக்கிறாராம். அவரோடு நின்ற கட்சியினர், வேட்பாளருக்கு ஆதரவாக களத்துக்கு வர மறுக்க, தலைமையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. நாங்க ஒண்ணும் செய்ய முடியாதுன்னு கைவிரிச்சிட்டாங்களாம்.

சகாயம் கிடைக்குமா?

மாம்பழ ஊரில் சூரிய கட்சிக்காக களம் இறங்கி இருக்கும் வேட்பாளர் மீசையை முறுக்கிட்டு கிளம்பினால், அவர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சகாயம் பெற்றவர்கள் பலரும் கூடவே வருகின்றனராம். மீசை மனிதரின் அருமை, பெருமைகளைச் சொல்லி அவருக்காக ஓட்டு வேட்டையாடுகின்றனராம்.

கரன்ட் 'கட்' கூடாது

தேர்தல் நெருக்கத்தில் மின் பற்றாக்குறை ஏற்படும் என, துறைக்கு வெளியிலிருந்து ஆளும்கட்சித் தலைமைக்குத் தகவல் போனதும் துறை அதிகாரிகளை வரவழைத்தவர்கள், என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ தெரியாது; தேர்தல் வரைக்கும் ஒரு நிமிஷம் கூட கரன்ட் இல்லாத நிலை இருக்கக் கூடாது என, எச்சரிக்கும் தொனியில் உத்தரவிட்டிருக்கின்றனராம்.



விரக்தியில் திரும்பிய தலைகள்

மாநிலத்தின் கடைக்கோடியில் இருக்கும் தொகுதிக்குச் சென்று, பொன்னான மனிதருக்கு வேலை செய்யுங்கள் என, தாமரை கட்சியின் சிறுபான்மையின பிரமுகர்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு போனதாம். பெயருக்கு ஒரு சிலர் தொகுதிக்கு போய், ரூம் போட்டு தங்கினர். ஆனால், லோக்கல் கட்சியினர் எந்த விபரங்களும் சொல்லாததோடு, ஒத்துழைப்பும் கிடைக்காததால் விரக்தியில் திரும்பி விட்டனராம்.

கட்சி பெருமைக்கு குறைவில்லை

முதுகெலும்பு பிரச்னையால் தேர்தல் பணியில் ஈடுபடப் போவதில்லை என்று சொல்லி தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கிய பூ நடிகையை, கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கவில்லையாம். இது தான் இந்த கட்சியினர் கொடுக்கும் மரியாதை என குடும்பத்திலேயே இருப்போர் சொல்ல, அப்படியெல்லாம் சொல்லாதீங்கன்னு கட்சி பெருமை பேசுறாராம் நடிகை.

அழைப்பு மேல் அழைப்பு

சூரிய கட்சித் தலைவர்கள் முதல், டில்லி தலைவர்கள் வரை தேர்தல் பிரசாரத்தில் சகட்டுமேனிக்கு கேலியும், கிண்டலுமாக விமர்சிக்கும் இலை கட்சி நடிகைக்கு, கட்சியில் கடும் வரவேற்பாம். எங்க தொகுதிக்கு வாங்கம்மா என்று பலரும் அழைப்பு மேல் அழைப்பு விடுக்க, எந்த தொகுதிக்கு போவது என புரியாமல் தவித்த நடிகை, தலைவர் யோசனைபடியே தொகுதிகளை தேர்வு செய்கிறாராம்.




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்