அண்ணாமலை சந்திப்பு கலக்கத்தில் காங்., கட்சி
தஞ்சாவூர், காங்., மாவட்ட தலைவரான கிருஷ்ணசாமி செல்வாக்கு மிக்க நபர். தனிப்பட்ட முறையில் ஆட்டோ, விளையாட்டு என பல்வேறு சங்கங்களின் தலைவராக இருந்து வருகிறார். தஞ்சை மாவட்டத்தின் பிரபலமான பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லுாரியின் தாளாளராகவும் இருந்து வருகிறார். இவர், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரனின் சம்பந்தி.
இந்நிலையில் நேற்று முன்தினம், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கிருஷ்ணசாமியின் வீட்டுக்கு வந்து சந்தித்தார். பின் இருவரும் தனி அறையில், 15 நிமிடம் பேசினர்.
இந்த தகவல் காங்., கட்சி நிர்வாகிகள், தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், மரியாதை நிமித்தமாக இருவரும் சந்தித்ததாகவும், அரசியல் இல்லை எனவும் அண்ணாமலையும், கிருஷ்ணசாமியும் தெரிவித்தனர்.
இருப்பினும், பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளை தவிர்த்து விட்டு, அண்ணாமலை, கிருஷ்ணசாமி இருவரும் தனிமையில் பேசிய விவகாரம், காங்கிரஸ் கட்சி தலைமைக்கு நெருடலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கிருஷ்ணசாமியை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கிருஷ்ணசாமியின் சம்பந்தி பா.ஜ., கூட்டணியில் இருப்பதால், ஓட்டு வங்கி பாதிக்கப்படுமோ என கலக்கத்துடன், தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இருக்கின்றனர்.
ஏற்கனவே, கிருஷ்ணசாமி பா.ஜ.,வில் இணைய உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. தற்போது, அண்ணாமலை - கிருஷ்ணசாமி சந்திப்பு தேர்தல் நேரத்தில் நடந்து இருப்பது, தமிழக அரசியலில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து