வாய் கொழுப்பு பேச்சால் வலிமை இழக்கும் பா.ஜ., வேட்பாளர்
அடுத்தடுத்த சர்ச்சை, மேடைகளில் இஷ்டத்திற்கு பேசும் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் நரசிம்மனால் அக்கட்சியினரும், கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் விரக்தி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளரான நரசிம்மன், தான் செல்லும் இடங்களுக்கு பவுன்சர்களோடு சென்று அதிர்ச்சியளித்தார். நம் நாளிதழில் செய்தி வெளியாகி, தலைமையின் கண்டனத்திற்கு பின், பவுன்சர்களை நீக்கினார்.
ஆனாலும், தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆனது போல், அவரது பேச்சுகளும், செய்கைகளும் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில், அவரது அறிமுகத்தை கூட யாரும் விரும்பாமல், உணவருந்த சென்றதால், அரங்கமே காலியானது. அதன் பின்னரும் நிலைமையை உணராமல், மேடைகளில் இஷ்டத்திற்கு பேசி வருகிறார்.
ஊத்தங்கரையில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் பேசிய நரசிம்மன், 'அப்பகுதியில் பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டுகள் வாங்கி தரும், பா.ஜ., - பா.ம.க., மாவட்ட செயலர்களுக்கு கார், அதிக ஓட்டுகள் வாங்கி தரும் கிளை நிர்வாகிகளுக்கு, 1 லட்சம், 50,000 மற்றும் 25,000 ரூபாய் பரிசு' என மேடையிலேயே பேசினார்.
இது குறித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'கட்சி செலவுக்கு கூட பணம் செலவு செய்யாமல், மற்றவர் தயவை எதிர்பார்ப்பவர் நரசிம்மன். அவர், வாயை மூடி அமைதியாக இருந்தாலே, நாங்கள் ஓட்டு வாங்கி கொடுப்போம். சம்பந்தமில்லாமல் பேசி, இருக்கும் ஓட்டுகளை காலி செய்து விடுவாரோ என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
'தி.மு.க., - காங்., கட்சி நண்பர்கள் எல்லாம் எனக்கு தெரியும் என மேடையில் பேசுகிறார். எதிர்க்கட்சியினரை விமர்சிக்காமல் நண்பர்கள் என பேசினால், ஓட்டு எப்படி விழும்? இத்தொகுதியில் பா.ஜ., பின்னடைவுக்கு நரசிம்மனே காரணமாகி விடுவார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது' என்றனர்.
வாசகர் கருத்து