முதல் கட்ட நிதியே இன்னும் வரலை: காங்., வேட்பாளர் மீது தி.மு.க., விரக்தி

திருநெல்வேலி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கிய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை தி.மு.க.,வினர். தற்போதைய எம்.பி., ஞானதிரவியமும், வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிரகாம்பெல்லும் கல் குவாரி உரிமையாளர்கள். தேர்தல் அறிவித்ததுமே குறைந்தபட்சம் 20 கோடியுடன் களம் இறங்குவர் என எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ், காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வழக்கமாக வேட்புமனு தாக்கல் தினத்திலேயே, ஒரு பூத்துக்கு ரூ.10,000 வினியோகிக்கப்படும். ஆனால் இன்னமும் முதல்கட்ட கட்சி நிதி கூட வரவில்லை.
அதற்காக காங்கிரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் தி.மு.க.,வினர் களம் இறங்கி விட்டனர். வண்ணாரப்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் தி.மு.க ., அலுவலக வளாகத்திலேயே காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தை தனிக் குடித்தனமாக துவங்கி விட்டனர்.
வண்ணாரபேட்டையில் காங்கிரசுக்கு என பக்காவாக அலுவலகம் இருந்தும், அங்கு அலுவலகம் திறந்தால் கோஷ்டி பூசல்களை சமாளிப்பது சிரமம் என்பதால் இந்த முடிவு.
தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், எம்.எல்.ஏ., அப்துல் வஹாப் ஆகியோர் தங்களின் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்திய பிரசார வாகனத்தை காங்கிரசுக்கு பயன்படுத்துகின்றனர். ஆலங்குளம், ராதாபுரம், நாங்குநேரி தொகுதியில் இதுவரை வாகனம் ஏற்பாடு செய்யப்படவில்லை. காங்கிரஸ் தேர்தல் அலுவலக திறப்பு விழாவிலேயே நாங்குநேரி காங்., - எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் பங்கேற்கவில்லை.
அவர் தன் மகனுக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு கிடைக்காத வருத்தத்தில் இருக்கக்கூடும் என்கின்றனர் தி.மு.க.,வினர். பகுத்தறிவு என பேசும் தி.மு.க.,வினர் தேர்தலின் போது மட்டும் வண்ணாரபேட்டை வெற்றி விநாயகர், திருநெல்வேலி டவுன் ஈசான விநாயகர் கோவில்களில் இருந்து பிரசாரத்தை துவக்குவது வழக்கம். அதன்படி வழக்கம் போல ராபர்ட் புரூசுக்கும் விநாயகர் கோவிலில் இருந்தே பிரசாரத்தை துவக்கினர்.
வாசகர் கருத்து