பிரியாணி இல்லாத தேர்தல் அடக்கி வாசிக்கும் கட்சிகள்

லோக்சபா தேதியை அறிவித்த தேர்தல் கமிஷன், வேட்பாளர்கள் அதிகபட்சமாக, 95 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டும் என, கட்டுப்பாடு விதித்துள்ளது. உணவுக்கு அந்தந்த மாவட்டத்துக்கு ஏற்ப விலை பட்டியல் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில், இரண்டு இட்லி - சட்னி, சாம்பாருடன் ரூ.45, வடை ரூ.25, பொங்கல் 60 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காபி ரூ.30; டீ ரூ.24; பால் ரூ.20; சமோசா ரூ.20; பப்ஸ் ரூ.20; முட்டை பப்ஸ் ரூ.25; தண்ணீர் பாட்டில் ரூ.15; கலவை சாதம் ரூ.50; சிக்கன் பிரியாணி ரூ.120; மட்டன் பிரியாணி ரூ.200; முட்டை பிரியாணி ரூ.60; காளான் பிரியாணி ரூ.70; வெஜ்பிரியாணி ரூ.60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் பொதுமக்களுக்கு சாப்பாடு போட்டால், நிச்சயம் 95 லட்சம் ரூபாயை தாண்டிச் செல்லும்.
அதனால் இந்த தேர்தல், பிரியாணி, கலவை சாதம் இல்லாத தேர்தலாக மாறியுள்ளது. ஒரு சில அரசியல் கட்சியினர், பணமாக கொடுத்து ஹோட்டல்களில் சாப்பிட வைக்கின்றனர். கூட்டத்தை அவசரமாக முடிப்பதுடன், தண்ணீர் மட்டுமே குடிக்க வழங்குகின்றனர்.
'கட்சி கூட்டங்களில் பிரியாணி வழங்க வேண்டுமென நினைக்கிறோம். கூட்டத்தை கண்காணிக்க வரும் குழுவினர் சொல்லும் கணக்கைத்தான் தேர்தல் கமிஷன் ஏற்கும். 1,000 பேருக்கு மேல வந்தாங்க; பிரியாணி போட்டாங்க எனக் கூறினால், அதற்கேற்ப கணக்கு காட்ட வேண்டும். அவ்வாறு காட்டும்போது, செலவு கையை கடிக்கும். இதனால், தான் பிரியாணி இல்லாத தேர்தலாக மாறியுள்ளது' என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து