விருது கொடுத்தனர் என்பதற்காக கூட்டணி வைக்க முடியுமா : பிரேமலதா சிறப்பு பேட்டி

அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, 5 தொகுதிகளுடன், ஒரு ராஜ்யசபா சீட்டையும் உறுதி செய்து, லோக்சபா தேர்தல் பிரசார களத்தில் குதித்துள்ளார் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா. எந்த குழப்பமும் இன்றி துணிச்சலான, தெளிவான பேச்சுக்கு சொந்தக்காரர். அனல் பறக்கும் தேர்தல் பணிகளுக்கு இடையே, நம் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

ஆரம்பத்தில் 14 தொகுதிகள் கேட்ட நீங்கள், 5 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டது ஏன்?



தனிப்பட்ட முறையில், பிரேமலதா 14 தொகுதிகளை கேட்கவில்லை. கடந்த 2014ம் ஆண்டு கூட்டணி அமைத்தபோது என்ன இருந்ததோ, அதை உரிமையோடு கேட்டோம். இது, மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவு. ராஜ்யசபா சீட் உரிமையை பெற வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகள் விரும்பினர். அதை தான் அன்றைக்கு நான் கூறினேன். இந்த முறை, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, மாவட்ட செயலர்கள் விரும்பினர். அந்த நிலைப்பாட்டை எடுத்தோம்.

கட்சியினருக்கு விருதுநகரில் வாய்ப்பு வழங்காமல், உங்கள் மகனுக்கே சீட் கொடுத்திருக்கிறீர்களே?



கூட்டணியில் மொத்தம், 5 தொகுதிகள் கிடைத்தன. ஏன் விருதுநகரை தேர்வு செய்தோம் என்றால், அது விஜயகாந்த் பிறந்த ஊர். விஜயகாந்தின் அப்பா, அம்மா, சின்னம்மா ஆகியோரின் பூர்வீக ஊர். குலதெய்வங்கள் அங்குதான் இருக்கின்றன. எங்கள் பூர்வீகம் துவங்கிய இடம் விருதுநகர். தே.மு.தி.க., ஆரம்பிக்கப்பட்டது திருப்பரங்குன்றத்தில்தான்.

எனவே, எல்லா சிறப்புகளும் அங்கு இருப்பதால், தொண்டர்கள், மக்கள் விருப்பப்படி, விஜய பிரபாகரன் அங்கு போட்டியிடுகிறார். மீதி நான்கு தொகுதிகளில் கட்சியினர் தான் போட்டியிடுகின்றனர். மூன்று பேர் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்; ஒருவர், 2006 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர். விஜயகாந்த் மீதும், தலைமை மீதும் நம்பிக்கையுடன் இருந்ததால், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் சேராமல் பா.ம.க., ஒதுங்கிய பின்தான், கூட்டணியில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதாக சொல்லப்படுகிறதே...



அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி இயற்கையான கூட்டணி. அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்கின்றனர். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா வழியில் நடக்கின்றனர். அது எங்களுக்கு பிடித்திருக்கிறது. எனவே, பா.ம.க., ஒதுங்கிய பின் எங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதாக கூறுவது தவறு.

பா.ஜ., கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவர்கள், தேர்தல் களத்துக்கு வந்திருக்கும் சூழலில், நீங்கள் மட்டும் போட்டியிடாதது ஏன்?



அது அவர்கள் விருப்பம். அதைப்பற்றி எனக்கு கருத்தில்லை. விஜயகாந்த் இருந்தால் பிரசாரத்திற்கு சென்று இருப்பார். இப்போது மொத்த பொறுப்பும் என்னிடம் வந்து விட்டதால், கூட்டணிக்கும், தே.மு.தி.க., வேட்பாளர்களுக்காகவும், 40 தொகுதிகளுக்கும் பிரசாரத்திற்கு செல்ல வேண்டும். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், அனைத்து தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்ய வேண்டும் என, என்னிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. என் கணவரை, கட்சியின் தலைவரை இழந்துவிட்டு, மிகப்பெரிய சோகத்தில் இருக்கும்போது, எப்படி போட்டியிட முடியும்? மிகப்பெரிய இழப்பையும், சோகத்தையும் மனதிற்குள் வைத்துக்கொண்டு, போட்டியிட்டே ஆக வேண்டும் என்பதற்காக, தேர்தல் களத்தில் நிற்கிறோம்.

வழக்கமாக போட்டியிடும், உங்கள் சகோதரரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான எல்.கே.சுதீஷுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லையே...



சுதீஷுக்கு உடம்பு சரியில்லை. ஆறு மாதமாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இது வெயில் காலம். ஆறு சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்ய வேண்டும். எனவே, தேர்தலில் போட்டியிட வேண்டாம் என, மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அதன்படி அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடுவார்.

கடைசி வரை பா.ஜ.,வுடனும் பேச்சு நடத்தினீர்கள். அது ஏன் கைகூடவில்லை?



கடந்த 2014 முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தோம். அத்தனை பேரும் விஜயகாந்த் மறைவிற்கு வந்து, இறுதி அஞ்சலி செலுத்தினர். அது, நட்பு ரீதியான விஷயம். இம்முறை அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தே.மு.தி.க., ஒட்டுமொத்த கட்சியின் முடிவு. அதேநேரத்தில், பா.ஜ., நிர்வாகிகளுடன் நட்புணர்வுடன், அதே மரியாதையுடன் நாங்கள் இருக்கிறோம்

மத்திய அரசு, விஜயகாந்துக்கு 'பத்ம பூஷண்' விருது கொடுத்து கவுரவித்தும், அவர்களுக்கு நீங்கள் ஏன் அனுகூலமாக இல்லை?



விஜயகாந்தின் 45 ஆண்டுகால திரையுலக பயணம், மக்கள் சேவை, அரசியலில் அவர் ஆற்றிய பணிகளுக்கு கவுரவமாக, 'பத்ம பூஷண்' விருதை மத்திய அரசு வழங்கியது. பா.ஜ., கொடுக்கவில்லை. அந்த கவுரவத்தை விஜயகாந்திற்கு வழங்கிய மத்திய அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். விருது கொடுத்தனர் என்பதற்காக, ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது கிடையாது.

விஜயகாந்த் மறைவுக்குப் பின், தமிழக அரசு மரியாதை கொடுத்ததோடு, இறுதி காரியங்களுக்கு உறுதுணையாக இருந்த தி.மு.க., தலைமையை, மிகக் கடுமையாக தேர்தல் களத்தில் நீங்கள் விமர்சிக்கிறீர்களே, ஏன்?



இதற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு தே.மு.தி.க., சார்பில் பலமுறை நன்றி தெரிவித்துள்ளோம். முதல்வரின் பிறந்த நாளுக்கு கூட வாழ்த்து தெரிவித்தோம். அஞ்சலிக்கு தீவுத்திடல் கொடுத்தது, இறுதி மரியாதை செய்தது என, எதையும் என்றைக்கும் நாங்கள் மறக்க மாட்டோம். அதற்காக, சில விஷயங்கள் வெட்ட வெளிச்சமாக நடக்கும்போது, அதை எதிர்க்காமல் இருக்க முடியாது.

நாட்டிலேயே பா.ஜ.,வும், தமிழகத்தில் தி.மு.க.,வும் தேர்தல் பத்திரங்களை அதிகளவில் நன்கொடையாக பெற்றதாக தெரிய வந்துள்ளது. இதை மறைமுக ஊழலாக மக்கள் கருதுகின்றனர். இது தனிப்பட்ட பிரேமலதா கருத்து கிடையாது. அந்த பணத்தை, தேர்தல் கமிஷனிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என, நீதியரசர்கள் கூறினர். அதைத்தான் அன்றைக்கு திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசினேன்.

உங்கள் நண்பர் தமிழிசை, கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்திற்கு வந்துள்ளது குறித்து...



தேசிய ஜனநாயக கூட்டணி 2014ம் ஆண்டு உருவானது முதல், அவர் என் நண்பராகி விட்டார். பக்கத்து தெருவில் வசிக்கிறார். என் வீட்டு பக்கம் போகும்போது, வந்து பேசிவிட்டு செல்வார். அவருக்கு கவர்னர் பதவி கிடைத்ததும், முதல் ஆளாக சென்று வாழ்த்தினேன். பதவி ஏற்பு விழாவிலும் பங்கேற்றேன். ஒருவருக்கு கவர்னர் பதவி கிடைப்பது பெரிய விஷயம். தமிழிசைக்கு தெலுங்கானா, புதுச்சேரி என இரண்டு மாநில கவர்னர் பதவி கிடைத்தது. இது மிகப்பெரிய அதிர்ஷ்டம்.

அவர் திடீரென்று ராஜினாமா செய்தது எனக்கு புரியாத புதிராக உள்ளது. அவர் முடிவெடுத்து விட்டதால், அதன்பின் நான் எதுவும் கேட்க முடியாது. அது அவரது நிலைப்பாடு; கட்சியின் நிலைப்பாடு. தமிழிசை தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஜூன் 4க்கு பின் இந்த புதிருக்கு விடை கிடைக்கும்.

மத்திய அரசையும் அவ்வப்போது விமர்சித்து வந்த தே.மு.தி.க., - பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு முயற்சித்த போது நெருடல் ஏற்பட்டதா?



தவறுகளை சுட்டி காட்டாமல் இருக்க முடியாது. குடியுரிமை திருத்த சட்டம், காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை நாங்கள் கண்டித்தோம். சொன்னதை செய்யாததை சுட்டி காட்டினோம். அதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதே தான் தமிழக அரசுக்கும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, கஞ்சா, போதைப்பொருள் விற்பனை தலைவிரித்தாடுகிறது.

ஜாபர் சாதிக் எந்த கட்சியில் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். போதை கலாசாரத்தால் தமிழக பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது வருங்கால தறைமுறைக்கு தலைக்குனிவு. தவறுகள் நடக்கும்போது, தே.மு.தி.க., தட்டி கேட்கும். கூட்டணிக்கும், நட்புணர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, எந்த நெருடலும் இல்லை.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைதான், கூட்டணி அமையாமல் போனதற்கு காரணம் என, தே.மு.தி.க.,வினர் சொல்கின்றனரே...



அதற்கு தனிநபர் காரணம் கிடையாது. அண்ணாமலைக்கும், எங்கள் கூட்டணிக்கும் என்ன இருக்கிறது? தவறான செய்தி. இதில் யார் மீதும், தவறும், குற்றமும் சொல்ல முடியாது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு.

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என இப்போதே அறிவித்துள்ளீர்களே, ஏன்?



அ.தி.மு.க.,வினர் அந்த விஷயத்தில் உறுதியாக உள்ளனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கடைசி நிமிடம் வரை குழப்பம் வந்து, கூட்டணி கைகூடாத நிலை ஏற்பட்டது. அதுபோன்று இனி ஏற்படக்கூடாது என்பதற்காக, இரண்டு கட்சி பொதுச்செயலர்களும் பேசி முடிவெடுத்துள்ளோம். டிசம்பர் மாதம் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும்.

மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்து விட்டால், அந்த ஆட்சியை ஆதரிப்பீர்களா?



யார் பிரதமர் என்று மக்கள் முடிவெடுப்பர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அதற்கு கட்டுப்பட்டு, யார் பிரதமராக வந்தாலும், தே.மு.தி.க., முழு ஆதரவு கொடுக்கும். மக்களை பாதிக்கும் விஷயங்களை ஏற்க மாட்டோம். இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் உள்ள அம்சங்கள் குறித்து, மத்திய அரசு விளக்க வேண்டும். அதில், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் பாதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதை சாக்காக வைத்து, தீவிரவாதிகள் ஊடுருவுவதையும் தே.மு.தி.க., ஏற்காது. எனவே, சட்டம் குறித்து விளக்கம் கேட்டு எதிர்ப்பு குரலை பதிவு செய்துள்ளோம்.

அ.தி.மு.க., கூட்டணியில் சேராமல், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் ஒதுங்கி கொண்டது ஏன்...



ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு, எதிர்ப்பார்ப்புகள் இருக்கும். பா.ம.க., அருளை அனுப்பி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து பேசியது. திடீரென, இரவோடு, இரவாக பா.ஜ.,வுடன் கூட்டணி கையெழுத்து போடுகின்றனர். நாங்கள் ஒரு முடிவெடுத்து விட்டால் பின்னோக்கி வரமாட்டோம். பா.ம.க., கூட்டணி நிலைப்பாடு குறித்து அந்த கட்சி தலைவர் அன்புமணியிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் என்ன பேசினர் என்று எனக்கு தெரியாது.

உங்கள் மேடை பேச்சை நிறைய பேர் பாராட்டுகின்றனர். அதற்காக பயிற்சி எடுத்தீர்களா?



கடந்த 19 ஆண்டுகளாக மேடை பேச்சு, பிரசாரம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என அனைத்திற்கும் நானே எனக்குள் பயிற்சி எடுக்கிறேன். எனக்கு தனியாக பயிற்சியாளர்; ஆலோசகர் கிடையாது. அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்கிறேன். இன்று என்ன நடக்கிறது என்பதை விரல் நுனியில் வைத்து இருப்பேன். நான் அரசியலை தீவிரமாக விரும்புகிறேன். அந்த விருப்பத்தின் காரணமாக, அத்தனை பேச்சுகளையும் நானே தயாரித்து பேசுகிறேன்.

கடந்த 2006ம் ஆண்டு தே.மு.தி.க., தேர்தல் அறிக்கை முதல், அனைத்து தேர்தல் அறிக்கைகளையும், என் தலைமையிலான குழுதான் தயாரித்தது. அதில் பெரும் பங்கு என்னுடையது. முதல் தேர்தல் அறிக்கையில் புரட்சிகரமான தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றன. அதை தமிழகம் மட்டுமின்றி, பல மாநில அரசுகளும் படிப்படியாக பின்பற்றுகின்றன. மக்களின் எண்ணங்களை பிரதிபலித்து பேசுவதால், அது பாராட்டிற்கு உள்ளாகிறது என நினைக்கிறேன்.


Kalyanaraman - Chennai, இந்தியா
29-மார்-2024 15:09 Report Abuse
Kalyanaraman அடுத்த தேர்தலில் கட்சி இருக்குமா என்று தெரியவில்லை. தேமுதிக, அதிமுகவிற்கு பலிகடாவாகி விட்டது என்பதில் சந்தேகமில்லை.
Anbuselvan - Bahrain, பஹ்ரைன்
29-மார்-2024 14:41 Report Abuse
Anbuselvan கூட்டணிக்காக விருது கொடுக்கவில்லை அவரது பண்பிற்காகதான் விருது கொடுக்கப் பட்டது என அவர்கள் கூறுகிறார்களே?
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்