அது என் கருத்து, மன்னிப்பு கேட்க முடியாது: அண்ணாமலை
"மக்கள் மத்தியில் பா.ஜ.,வுக்கு ஆதரவு பெருகி வருவதைப் பார்த்து அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் ஒன்று சேர்ந்து எங்களை எதிர்க்கின்றன" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்காக, வேட்புமனு தாக்கல் செய்ய கோவை கலெக்டர் அலுவலகம் வந்தார்.
பின்பு, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கோவை மக்களைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக மிகுந்த அன்பு செலுத்தி வருகின்றனர். தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியை மக்கள் பார்த்த்து வருகின்றனர். கோவை தொகுதியின் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களின் அன்பை பார்த்து வருகிறேன். மூன்றாவது முறையாக கோவையின் குரல், லோக்சபாவில் ஒலிக்கும் என உறுதியாக நம்புகிறோம்.
அ.தி.மு.க., வேட்பாளரின் தந்தை குறித்து நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது. அது என் கருத்து. தமிழகத்தைக் கெடுக்கும் சக்திகளோடு தான் நாங்கள் போட்டியிடுகிறோம்.
மக்கள் மத்தியில் பா.ஜ.,வுக்கு ஆதரவு பெருகி வருவதைப் பார்த்து அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் ஒன்று சேர்ந்து எங்களை எதிர்க்கின்றன. கோவையின் தொழில்துறை வளர்ச்சிக்காக மா.கம்யூ., கட்சியின் எம்.பி., எத்தனை முறை லோக்சபாவில் பேசியுள்ளார்?
கோவையில் ஜவுளித்துறை வளர்ச்சிக்காக பல சலுகைகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். விமான நிலைய விரிவாக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் 3 முறை கடிதம் எழுதியிருக்கிறார். சட்டமன்றத்தில் வானிதி சீனிவாசனும் 3 முறை கேள்வி எழுப்பினார்.
விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலங்களை கையகப்படுத்துவதில் தாமதம் செய்கின்றனர். கோவை தொகுதிக்கு பா.ஜ., வேட்பாளர் தேவை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.
கோவையின் காவல் தெய்வமாக இருக்கும் கோனியம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்தேன். நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேண்டவில்லை. மக்கள் நலனுக்காக மட்டுமே கோயிலில் வேண்டிக் கொண்டேன்.
தேர்தலைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க., தி.மு.க., என இரண்டு கட்சிகளுக்கும் பயம் வந்துவிட்டது. கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் சமூக தலைவர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். அவர்களின் ஆதரவு எங்களுக்கு உண்டு.
பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அனைவரையும் கோவையின் மக்களாக பார்க்கிறோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
வாசகர் கருத்து