பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருமணமே நடக்காது: அகிலேஷ் யாதவ்
"அடுத்து 10 ஆண்டுகளுக்கு பா.ஜ., ஆட்சியில் இருந்தால் இளைஞர்களுக்குத் திருமணம் நடக்காது" என, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்தார்.
லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. அங்கு பா.ஜ.,வுக்கும் சமாஜ்வாடி கூட்டணிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், உ.பி., மாநிலம் எட்டாவாவில் உள்ள சைபை கிராமத்தில் நடந்த ஹோலி பண்டிகை விழாவில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஹோலி பண்டிகை ஒருவரை ஒருவர் கொண்டாடுவதற்கான வாய்ப்பாக இருக்கிறது. அநீதிக்கு எதிராக போராடுவோம் என ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். இது ஹோலி பண்டிகை. ஆனால், சிலருக்கு சில வண்ணங்கள் பிடிப்பதில்லை. ஆனால், நமது ஜனநாயகம் பலதரப்பட்ட சித்தாந்தங்களை கொண்டது. அது மாறுபட்ட சிந்தனைகளை கொண்டிருக்கும்போது தான் வலுவானதாக இருக்கும்.
அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிகிறது. வேலையை கொடுப்பதற்கு அரசு விரும்பாததால் தான் வினாத்தாள் கசிகிறது. அடுத்து 10 ஆண்டுகள் பா.ஜ., ஆட்சியில் இருந்தால் திருமணத்தைக் கூட நடத்த முடியாது. அதற்குள் வேலை கிடைக்காமல் உங்களுக்கு வயதாகிவிடும்.
ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிறகு எப்படி வளர்ந்த நாடாக இந்தியா மாறும். தொழிற்சாலைகளை அமைக்க முடியாத நிலையால், இளைஞர்களுக்கு வேலையும் கிடைப்பதில்லை. உ.பி.,யில் அமைய வேண்டிய செமிகண்டக்டர் தொழிற்சாலைகள், குஜராத்துக்கு சென்றுவிட்டன.
தேர்தல் பத்திரங்களால் அதிகம் நன்கொடை பெற்றது யார் என உங்களுக்கே தெரியும். ஈ.டி, வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்றவற்றின் மூலம் பணத்தைப் பறிக்கின்றனர். பா.ஜ.,வுக்கு யாராவது பணம் கொடுத்தால் அது நன்கொடை. அதுவே, மற்ற கட்சிகள் வாங்கினால் அதை கறுப்புப்பணம் என்கின்றனர்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.
வாசகர் கருத்து