பா.ஜ., தொண்டர்கள் மீது தடியடி... எஸ்.பி., மீது புகார்: ஊட்டியில் என்ன நடந்தது?
ஊட்டியில் பா.ஜ., சார்பில் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது, பா.ஜ., தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்று தமிழகம் முழுவதும் பரவலாக வேட்புமனுத் தாக்கல் நடந்தது.
இந்நிலையில், நீலகிரி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் எல்.முருகன், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தொண்டர்களுடன் இன்று ஊர்வலமாக வந்தார்.
அதேநேரத்தில் அ.தி.மு.க.,வினரும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கூட்டம் அதிகரித்தது. தொண்டர்கள் அதிகமாக கூடியதால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பா.ஜ., தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் சில தொண்டர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதனைக் கண்டித்து பா.ஜ., தொண்டர்கள் கோஷம் எழுப்பிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கவனித்த அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர், "ஊட்டி எஸ்.பி. சுந்தர வடிவேலுவை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் போராட்டம் தொடரும்" என அறிவித்தனர்.
இதையடுத்து, தொண்டர்கள் மீது தடியடி நடத்தியதற்காக எஸ்.பி. சுந்தர வடிவேல் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், போராட்டம் கைவிடப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த தொண்டர்களை மருத்துவமனையில் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இச் சம்பவம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தமிழக பா.ஜ., மாநில துனை தலைவர் கரு.நாகராஜன் புகார் அளித்தார். பின் அவர் கூறியதாவது:
எங்கள் வேட்பாளர்கள் பல்வேறு பகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்து வரும் சூழலில், இன்று ஊட்டியில் நடந்த சம்பவத்திற்கு விசாரனை நடத்த வேண்டும். நீலகிரி எஸ்.பி.,யை இடமாற்றம் செய்ய வேண்டும். தமிழகத்தில் மனுத்தாக்கல் செய்யும் போது தடியடி நடத்துவது என்பது இதுவரையில் நடந்ததில்லை. தி.மு.க.,வின் கைப்பாகையாக எஸ்.பி.., செயல்படுகிறாரா என்ற சந்தேகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து