காங்கிரசை முடக்க பா.ஜ., பகல் கனவு : செல்வப்பெருந்தகை
"காங்கிரசை முடக்க வேண்டும், தலைவர்கள் மக்களை சந்திக்கக் கூடாது. நிதி ஆதாரத்தை முடக்கினால் அரசியல் இயக்கம் முடங்கிவிடும்; காங்கிரஸையும் முடக்கிவிடலாம் என்று மோடி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்" என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:
இன்று முதல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். பா.ஜ., அரசால் காங்கிரஸ் கட்சியின் நிதி ஏறக்குறைய 285 கோடி திருடப்பட்டுள்ளது.
ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் கட்சிகளை மோடி தொடர்ந்து ஒடுக்குகிறார். 2017-18 நிதி ஆண்டில் நாங்கள் தாமதமாக வருமான வரியை தாக்கல் செய்தோம் என்பதற்காக 11 கணக்குகள் மோடி அரசால் முடக்கப்பட்டுள்ளன.
காங்கிரசை முடக்க வேண்டும், தலைவர்கள் மக்களை சந்திக்கக் கூடாது. நிதி ஆதாரத்தை முடக்கினால் அரசியல் இயக்கம் முடங்கிவிடும்; காங்கிரஸையும் முடக்கிவிடலாம் என்று மோடி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்.
பணம் ஒரு பொருட்டே கிடையாது என்று மக்களை நம்பி காங்கிரஸ் கட்சி உள்ளது. ஓட்டு எண்ணிக்கையின்போது விவிபேட் 100 சதவீதம் எண்ணப்பட வேண்டுமென தேர்தல் கமிஷன் மற்றும் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்து உள்ளோம்.
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விரைவில் ராகுல் பிரசாரம் செய்ய உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து