அ.தி.மு.க., கொடி, சின்னம்: ஓ.பி.எஸ்., வழக்கில் என்ன நடந்தது?
"அ.தி.மு.க., கொடி, சின்னம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது" என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.,வின் கொடி, சின்னம் ஆகியவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அ.தி.மு.க.,வின் கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில், '42 ஆண்டுகளாக அ.தி.மு.க.,வின் அடிப்படை தொண்டர் மூதல் முதலமைச்சர் வரையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தேன். தற்போது கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியாததால், ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வின் கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் பிரச்னை ஏற்படுவதாக தொண்டர்களோ, பொதுமக்களோ புகார் அளிக்ககவில்லை. அப்படி இருக்கும்போது பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பழனிசாமியை பொதுச்செயலராக தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கவில்லை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ்ஸின் இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன், சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி விதித்த தடையை விலக்குவதற்கு இரு நீதிபதிகள் அமர்வும் மறுப்பு தெரிவித்தது.
"தேர்தல் முடிந்த பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். மேல்முறையீட்டு மனு மீது பழனிசாமி பதில் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதிகள், ஜூன் 10ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
வாசகர் கருத்து