விஜய பிரபாகரனும் என் மகன் மாதிரி தான்: ராதிகா சரத்குமார்
"தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விருதுநகர் தொகுதிக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். எனக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது" என, விருதுநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சார்பாக விஜய பிரபாகரனும் பா.ஜ., சார்பில் ராதிகா சரத்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், சிவகாசியில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை ராதிகா திறந்து வைத்தார். பின், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
விருதுநகர் லோக்சபா தொகுதியை நான் தேர்வு செய்யவில்லை. பா.ஜ., தலைமையில் இருந்து என்னை தேர்ந்தெடுத்து நிறுத்தியுள்ளனர். இங்கு பலமுறை பிரசாரத்துக்காக வந்துள்ளேன்.
விருதுநகர் தொகுதி மக்களுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவேன். இங்கு சிட்டிங் எம்.பி., மாணிக்கம் தாகூரின் செயல்பாடுகள் பெரிதாக இல்லை.
தற்போது நடப்பது சட்டசபை தேர்தல் அல்ல. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விருதுநகர் தொகுதிக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். பட்டாசு தொழிலை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். எனக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது.
தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் என் மகளுடன் படித்தவர். எனக்கும் அவர் ஒரு மகன் போலத் தான். அவர் நன்றாக இருக்க வேண்டும். வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து