ரயில் விடுவதாக ஒவ்வொரு தேர்தலிலும் 'ரீல்': 'சர்வே' கூட நடத்தாத ரயில்வே துறை
தமிழகத்தில் ரயில் போக்குவரத்து வசதி இல்லாத மாவட்டங்களில் பெரம்பலுாரும் ஒன்று. லோக்சபா தேர்தல் வரும்போதெல்லாம், ஓட்டுக் கேட்டு வரும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், பெரம்பலுாருக்கு ரயில் கொண்டு வருவேன் என, வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்பது பரம்பரை பரம்பரையாக நடந்து வருகிறது.
இத்தொகுதியின் பழைய எம்.பி.,க் களான தி.மு.க.,வை சேர்ந்த ஆ.ராசா, நெப்போலியன், அ.தி.மு.க.,வை சேர்ந்த மருதராஜா, தி.மு.க., கூட்டணியில் எம்.பி.,யான ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டபோது, 'தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் முதல் பெரம்பலுார் வழியாக நாமக்கல் வரை ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்துவேன்' என வாக்குறுதி அளித்தனர். அதனை நம்பி பெரம்பலுார் வாக்காளர்களும் அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்களுக்கு மாறி மாறி ஓட்டு போட்டனர்.
ஆனால், நடந்தது என்ன? மத்திய ரயில்வே துறை இத்திட்டத்துக்காக, 2003, 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் சர்வே மட்டுமே நடத்த உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அந்த சர்வே கூட நடக்கவில்லை.
இந்த நிலையில், இந்த லோக்சபா தேர்தலிலும் பெரம்பலுாருக்கு ரயில் விடுவதாக 'ரீல்' விட்டு வாக்காளர்களை ஏமாற்ற அ.தி.மு.க., - தி.மு.க., - ஐ.ஜே.கே., கட்சி வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர். இதன் முன்னோட்டமாக, கடந்த வாரம் நடந்த கட்சி ஆலோசனை மற்றும் செய்தியாளர் சந்திப்பில், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரும், தி.மு.க., வேட்பாளர் அருணும் பெரம்பலுாருக்கு ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்துவதாக 'ரீல்' விட்டிருக்கின்றனர்.
'ரீல்' விடுவதை நிறுத்தி விட்டு, இந்த முறையாவது தேர்வாகும் எம்.பி., ரயில் விட ஏற்பாடு செய்வாரா? என்ற கேள்வி வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வாசகர் கருத்து