கட்டுத்தொகை கட்டக் கூட காசு இல்லை : கலங்கும் சீமான்

தேர்தலில் மூன்று கூட்டணிகள் போட்டி போடுகின்றன. ஒரே ஒரு கட்சி தான் தனி அணி. அந்த ஒரே நபர் நான் தான். நாங்கள்தான் உண்மையான பெரிய கட்சி" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது:

என்னை நோக்கி வரும் இளைஞர்களை தடுக்கின்றனர். எங்கள் கட்சிக்கு யாரும் கோடிக்கணக்கில் நிதி தரப்போவதில்லை. பத்தாயிரம், இருபதாயிரம் கொடுத்தால் கூட அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்கின்றனர்.

ஆனால், ஈ.டி., ரெய்டு செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜ., பணம் வாங்குகிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் 6,250 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வாங்கியுள்ளனர். போதைப் பொருள் வியாபாரி, லாட்டரி வியாபாரி என அனைவரிடமும் பணம் வாங்கியுள்ளனர்.

இப்படி பணம் வாங்கினால் நல்ல ஆட்சியை தர முடியுமா. இஙகு ஜனநாயகம் என்பதே வெற்று வார்த்தையாக உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பில், 14 தொகுதிகள் உள்ள அசாமில் மூன்று கட்டமாக தேர்தலை நடத்துகின்றனர்.

ஏழு கட்ட தேர்தல்

40 தொகுதிகள் உள்ள பீகாரில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மேற்குவங்கம், உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. தமிழகம் புதுச்சேரியில் ஏன் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

எங்களிடம் கட்டுத்தொகை கட்டக் கூட காசு இல்லை. 20 நாள்களில் 40 தொகுதிகளில் பிரசாரம் செய்ய வேண்டும். தமிழகத்துக்கு 2 கட்டங்களாக தேர்தலை நடத்தலாம்.

இப்படியொரு சூழலில் தான், ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிப் பேசுகிறார்கள். தேர்தல் கமிஷன், தன்னாட்சி அதிகாரம் பெற்றது என்கிறார்கள். தங்கள் இஷ்டத்துக்கு நடப்பதுதான் தன்னாட்சியா.. குறைந்தபட்ச ஜனநாயகம் கூட இல்லை. தேர்தலில் வேலை செய்து பார்த்தால் தான் தெரியும்.

எங்கே எல்லாம் பா.ஜ.,வுக்கு வலு இல்லையோ அங்கெல்லாம் சீக்கிரம் தேர்தல் நடக்ககிறது. வாக்கு இயந்திரத்தில் தவறு நடப்பதை நிரூபிக்க முடியவில்லை என்கிறார்கள். நீட் தேர்வின்போது மூக்குத்தி, தோடு ஆகியவற்றைக் கூட கழட்டுகிறார்கள். மூக்குத்திக்குள் பிட்கொண்டு போய் எழுத முடியும் என்கிறார்கள்.

அப்படியானால், வாக்கு இயந்திரத்தில் தவறு செய்ய முடியாதா... சந்திராயனை இங்கிருந்து தானே கட்டுப்படுத்துகிறார்கள். பிறகு தவறு நடக்காது என எப்படி உறுதியாக கூற முடியும்?

சின்னத்தை வைத்து வியாபாரம்

சின்னம் எங்கே என நாம் தமிழர் தொண்டர்களிடம் தேடுதல் இருக்கிறது. என்ன சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவேன். ஆனால், எனக்கு வாக்களித்த மக்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை என்ன... 71 ஓட்டுகள் வாங்கிய கட்சிக்கு, 3 சின்னங்களை கொடுத்துள்ளனர். சின்னத்தை வாங்கி வியாபாரம் செய்வதை எப்படி அனுமதிக்கின்றனர்.

அவர்கள், இங்கு யாராவது நான்கு பேருக்கு சின்னத்தைக் கொடுத்து போட்டி போட வைப்பார்கள். கட்சிக்கு அங்கீகாரம் பெற வேண்டும் என்கிறார்கள். தி.மு.கவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றால் அங்கீகாரம் கிடைத்துவிடும்.

என்னைப் போல தனியாக நின்று அங்கீகாரம் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறட்டும். தமிழகத்தில் பா.ஜ., தனியாக நின்று அங்கீகாரம் பெறுமா.. நான் தமிழ்த் தேசியம் பேசுவது இனவாதம் என்றால், தெலுங்கு தேசம் என்ற பெயரில் ஒரு கட்சி இருக்கிறதே... அதைப் பற்றி சந்திரபாபு நாயுடுவிடம் கேட்பார்களா?

இந்திய தேசத்தில் அது என்ன தெலுங்கு தேசம்... தமிழ்த் தேசம் என்றாலே பிரிவினைவாதி என்கிறார்கள். 10 ஆண்டுகள் நாட்டை ஆண்டுவிட்டார்கள். ஆட்சியின் பத்து சாதனைகளை சொல்லி பிரதமர் ஓட்டு கேட்கலாமா.. இன்னும் 5 ஆண்டுகள் கொடுத்தால் நிறைய செய்வேன் எனக் கூறலாமே..

ஒரே பெரிய கட்சி

தேர்தலில் மூன்று கூட்டணிகள் போட்டி போடுகின்றன. ஒரே ஒரு கட்சி தான் தனி அணி. அந்த ஒரே நபர் நான் தான். நாங்கள்தான் உண்மையான பெரிய கட்சி. என் மக்களை நம்பி களத்தில் நிற்கிறேன். தமிழகத்துக்குப் பலமுறை பிரதமர் வந்துவிட்டார். வெள்ள பாதிப்பால் துயரத்தில் இருந்த மக்களைப் பார்க்க எத்தனை முறை வந்தார்... ஓர் அறிக்கையாவது வெளியிட்டாரா... பா.ஜ.,வுக்கு தமிழர்களின் வாக்கு முக்கியம். வாழ்க்கை அல்ல.

கூட்டணி நிலைப்பாடு குறித்த ராமதாஸிடம் தான் கேட்க வேண்டும். அவர் ஒரு முடிவு எடுத்துவிட்டார். அதை குறை சொல்ல வேண்டியதில்லை. பா.ஜ., குறித்து முன்பு அவர் பேசியதற்காக கோபப்பட்டு பா.ஜ., தான் கூட்டணி சேராமல் இருந்திருக்க வேண்டும். அவர் சொன்ன பிறகும் கூட்டணி சேர்வதை எப்படி எடுத்துக் கொள்வது?

கடந்த தேர்தலில், 'சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜ., வரும்' என தி.மு.க., பிரசாரம் செய்தது. எனக்கு போட்டால் நான் தானே வருவேன். இந்த அடிப்படை கூட தெரியாமல் பகுத்தறிவுவாதி என்கிறார்கள். இப்போது பா.ஜ., வளர்ந்துவிட்டது என்கிறார்கள்.

வெட்கமில்லாமல் பேசும் தி.மு.க.,

புதிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் எனக் கூறிவிட்டு, பிரதமரின் ஸ்ரீபள்ளியை ஏற்கிறார்கள். இது புதிய கல்விக் கொள்கையில் கிளைக் கல்வியா... மத்திய பள்ளிகளில் தமிழர் வரலாறு இடம்பெறப் போவதில்லை. பா.ஜ., கோயிலிலேயே தான் இருப்பார்கள். பூமிக்கு வர மாட்டார்கள்.

கடந்த தேர்தலில் 39 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றது. ஆனால், என்ன பயன்... மத்தியில் 18 ஆண்டுகள் தொடர்ந்து அதிகாரத்தில் தி.மு.க., இருந்தது. ஆட்சியை தாங்கிப் பிடித்து நடத்தியதே தி.மு.க.,தான் என்றார்கள். அப்போதெல்லாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க தெரியவில்லை.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம்; நீட் தேர்வை ரத்து செய்வோம் என வெட்கமில்லாமல் பேசுகிறார்கள். நீட் விலக்கு என்ற பெயரில் 50 லட்சம் கையெழுத்தை எங்கே கொடுத்தார்கள். சேலம் மாநாட்டில் அதையெல்லாம் காட்சிக்கு வைத்ததோடு முடிந்துவிட்டது.

சிலிண்டர் விலையை யாரிடம் சொல்லி குறைப்பார்கள். 'மத்திய அரசு வெள்ள நிவாரணம் கொடுக்கவில்லை' என ஸ்டாலின் சொல்கிறார். 'மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கவில்லை' என டி.ஆர்.பாலு சொல்கிறார். தமிழர்களை மிக மோசமாக தி.மு.க., மதிப்பீடு செய்கிறது.

இவ்வாறு சீமான் பேசினார்.


R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai, இந்தியா
22-மார்-2024 10:59 Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN நீங்க சொல்லுவது எல்லாம் மிகவும் சரியான மற்றும் ஆலோசனை செய்யக்கூடிய விஷயங்கள் தான். ஆனால், தங்கள் கட்சி திருட்டு திராவிடத்திற்கு துணை போவது போல் தோன்றுவது நியாயமில்லை என்று எப்படி கூறமுடியும்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்