'தி.மு.க.,வின் கிளைகளாக ஜமாஅத் அமைப்புகள்': அண்ணாமலை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிடுபவர், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை. போலீஸ் அதிகாரி பதவியை துறந்து விட்டு, தற்போது அரசியல்வாதியாக வலம் வரும் அவர், தேர்தல் களத்திற்கு அளித்த பேட்டி:

முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம், எப்படி ஏற்பட்டது?



கடந்த, 2018ல் கைலாய மலைக்கு சென்றேன். அப்போது தான், பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற, எண்ணம் வந்தது. வேலையை ராஜினாமா செய்த பிறகு, 'வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன்' என்ற, அமைப்பை துவக்கினேன். நான் அரசியலுக்கு வந்தது காலத்தின் கட்டாயம்.

போலீஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு, அரசியலுக்கு வந்ததன் பின்னணி என்ன?



பின்னணி எதுவும் இல்லை. 10 ஆண்டுகளில், மூன்று மாவட்டங்களில் எஸ்.பி.,யாக இருந்தேன். பெங்களூரில் துணை கமிஷனராக இருந்தேன். போதும் என்ற எண்ணம் ஏற்பட்டது; ராஜினாமா செய்து விட்டேன்.

அரசு வேலையோ, தனியார் வேலையோ, வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்று என்று தான் பெற்றோர் சொல்வர். இருந்த அரசு வேலையை விட்டு விட்டு, அரசியலில் ஈடுபட்டதை, உங்கள் பெற்றோர் எப்படி எடுத்து கொண்டனர்?



என்னை யாரும், ஐ.பி.எஸ்., படிக்க வேண்டும் என, சொல்லவில்லை. நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. வேலையை விடும் போதும், சுதந்திரமாகவே முடிவு செய்தேன். பெற்றோர், மனைவி உட்பட யாரும் எதிர்க்கவில்லை.

கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்த நீங்கள், திடீரென அரவக்குறிச்சிக்கு மாறியது ஏன்?



கிணத்துக்கடவு தொகுதி, பொறுப்பாளராக இருந்தேன். கட்சி தலைமை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கூறியதால் வந்து விட்டேன். உங்களை மட்டும்,

தமிழக பா.ஜ.,வில், செல்லப்பிள்ளையாக நடத்துவதன் மர்மம் என்ன?



நான் அப்படி நினைக்கவில்லை. என்னிடம் பொறுப்பை தந்தால், திறம்பட செய்வார் என்ற, நம்பிக்கை கட்சிக்கு ஏற்பட்டு இருக்கும். பொறுப்பை தருகிறார்கள், அதை சிறப்பாக, உண்மையாக செய்து வருகிறேன்.

பா.ஜ., தனித்து போட்டியிட்டு இருந்தாலோ, தனி அணி அமைத்திருந்தாலோ, நீங்கள் தான், முதல்வர் வேட்பாளராக இருந்திருப்பீர்கள் என்கிறார்களே?



அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என, பா.ஜ., தலைமை முடிவு செய்து விட்டது. மேலும், முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ்., எனவும், கடந்த மூன்று மாதங்களாகவே கூறி வருகிறோம். அதனால், மற்ற கேள்விகளுக்கே இடமில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை, மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக, குற்றம் சாட்டப்படுகிறதே?



தி.மு.க., வேறு வேலை இல்லாமல், இந்த குற்றச்சாட்டை கூறுகிறது. விலை உயர்வால் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மை தான். தற்போது, பெட்ரோல், டீசல் விலை குறைந்து கட்டுக்குள் உள்ளது. இந்த விலை உயர்வு, நிச்சயம் பாதிக்காது. விலை வேகமாக குறைந்து வருகிறது.

தமிழக அரசின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ள சூழலில், அ.தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், இலவசங்களை அள்ளி விட்டிருப்பது சரியா?



அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச அறிவிப்புகளை, தமிழக மக்களுக்காக வழங்கப்படும் சலுகைகளாக மட்டுமே, நான் பார்க்கிறேன்.

வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு தகுதி படைத்த கட்சிகள், தேர்தல் அறிக்கை வெளியிடுவதை ஏற்கலாம். சிறு, சிறு கட்சிகள் எல்லாம், தேர்தல் அறிக்கை வெளியிடுகிறதே?



ஒவ்வொரு கட்சிக்கும், ஒரு கொள்கை உள்ளது. அதில், பெரிய கட்சி, சிறிய கட்சி என்றெல்லாம் இல்லை. தேர்தல் அறிக்கை என்பது தேவையான ஒன்று. அதை வரவேற்கிறேன்.

அரவக்குறிச்சியில் ஒரு அண்ணாமலை என்ன, அவரை போல நுாறு அண்ணாமலைகள் வந்தாலும், பா.ஜ.,வுக்கு தோல்வி உறுதி என்கிறாரே செந்தில்பாலாஜி?



அரவக்குறிச்சியில் மீண்டும் போட்டியிடாமல், கரூருக்கு ஓடியது ஏன் என, செந்தில்பாலாஜி பதில் கூறட்டும். பிறகு, நான் பதில் சொல்கிறேன். தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளில், 11:00 மணிக்கெல்லாம், மாட்டு வண்டியை பூட்டிக்கொண்டு ஆற்றில் மணல் அள்ள போங்கள்.

எந்த அதிகாரி தடுத்தாலும், அந்த அதிகாரி அங்கே இருக்க மாட்டார் என, செந்தில் பாலாஜி சொல்லிஇருக்காறே?



அந்த பேச்சு ஆணவத்தின் உச்சம்.

முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில், அ.தி.மு.க., - பாஜ.,வினர் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்ய முடியவில்லையா?



இல்லை. முஸ்லிம் சகோதர, சகோதரிகள் வரவேற்பு அளிக்கின்றனர். ஆனால், ஜமாஅத் அமைப்புகள் தான், தி.மு.க.,வின் கிளைகளாக செயல்படுகின்றன. இது தான் வருத்தமாக உள்ளது.

சிறுபான்மையினர் ஓட்டுகள், அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு கிடைக்குமா?



வாய்ப்பு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மை மக்களுக்கு செய்து வரும் திட்டங்கள், சலுகைகள் குறித்து தேர்தல் பிரசாரத்தில் எடுத்து கூறி வருகிறோம்.

கரூர் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளிலும், தி.மு.க.,வை வெற்றி பெற வைப்பேன் என, செந்தில்பாலாஜி சொல்லி உள்ளாரே?



செந்தில்பாலாஜி முதலில், கரூர் தொகுதியில் ஜெயிக்கட்டும்.

பா.ஜ.,வுக்கு லேட்டஸ் வருகையான உங்களுக்கும், நடிகை குஷ்புவுக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் சீட் வழங்கியதால், பா.ஜ.,வில் பொறுமல் உள்ளதா?



நிச்சயம் இல்லை. திறமை, மக்களிடம் உள்ள செல்வாக்கு, கட்சி வளர்ச்சி பணிகளில் ஆர்வம் உள்ளவர்களை கண்டறிந்து, கட்சி மேலிடம் சீட் வழங்குகிறது. ஏ.சி., அறையில் உட்கார்ந்து கொண்டு, அரசியல் செய்பவர்களுக்கு வேலை இல்லை.

தி.மு.க., கூட்டணியை நிராகரிக்க, 100 காரணங்களை சொல்லிஉள்ளது பா.ஜ., தமிழகத்தில் தி.மு.க.,வை, பா.ஜ., எதிர்க்கும் அளவுக்கு, காரண காரியங்களுடன், அ.தி.மு.க., எதிர்க்கவில்லையே ஏன் ?



இந்த கேள்வி ஆச்சரியமாக உள்ளது. தி.மு.க.,வை எதிர்த்து உருவானது, அ.தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டங்களில், முதல்வரும், துணை முதல்வரும், தி.மு.க.,வை விமர்சனம் செய்து பேசி வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் செந்தில்பாலாஜி உள்ளிட்ட, தி.மு.க., வேட்பாளர்கள் குறித்தும், விமர்சனம் செய்து முதல்வர் பேசி வருகிறார்.

அ.தி.மு.க.,வில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட, அ.ம.மு.க.,வால், அ.தி.மு.க., கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா?



அ.ம.மு.க.,வால், எந்த பாதிப்பும், அ.தி.மு.க., கூட்டணிக்கு, 100 சதவீதம் வராது.

தமிழகத்தில், பா.ஜ., தோற்று விட்டால், நீங்கள் டில்லிக்கு போய் செட்டில் ஆகி விடுவீர்கள் என்கிறார்களே?



வேறு ஒரு ஊரில் செட்டில் ஆவதாக இருந்தால், நான் கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., வேலையில் ஓய்வு பெறும் வரை இருந்து இருக்கலாம். தமிழகம் என்னுடைய தாய். தேர்தல் முடிவுக்கு பிறகு தான், தமிழகத்தில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)