பா.ஜ., வேட்பாளர்கள் டாப்: மா.கம்யூ., ஒப்புதல்
கேரளாவில் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதுவரை எந்தத் தொகுதியிலும் தாமரை மலரவில்லை. கடந்த தேர்தலில் திருவனந்தபுரம், திருச்சூர் உட்பட சில தொகுதிகளில் பா.ஜ., இரண்டாவது இடத்திற்கு வந்தது.
இம்முறை கேரளாவில் நிச்சயம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைக்கும் என்று பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். வேட்பாளர்கள் தேர்விலும் பா.ஜ., அதிக கவனம் செலுத்தி உள்ளது. பா.ஜ., 16 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான பி.டி.ஜே.எஸ்., 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இதுவரை 12 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திருச்சூரில் நடிகரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுரேஷ் கோபிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் சுரேஷ்கோபியின் பெயர் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், 3 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று, அவர் இரண்டாவது இடத்திற்கு வந்தார். இதனால் இம்முறை திருச்சூர் மக்கள் தன்னை கைவிட மாட்டார்கள் என்று சுரேஷ் கோபி உறுதியாக நம்புகிறார். சுரேஷ் கோபி தவிர, கேரளாவில் செல்வாக்குள்ள ஷோபா சுரேந்திரன், எம்.டி.ரமேஷ் உட்பட கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கும் இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர மத்திய அமைச்சர்கள் ராஜிவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்திலும், வி. முரளீதரன் ஆற்றிங்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் வேறு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள். இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவி காலம் உள்ளது என்றாலும், அமைச்சர்கள் போட்டியிட்டால், கூடுதலாக ஓட்டுகள் கிடைக்கும் என பா.ஜ., நினைக்கிறது.
இம்முறை கேரளாவில் இடது ஜனநாயக கூட்டணிக்கும், பா.ஜ., கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது' என்று கூட்டணி அமைப்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இ.பி. ஜெயராஜனே கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.,வில் அனைத்து வேட்பாளர்களும் திறமையானவர்கள் என்பதால், இம்முறை தங்களுக்குள் போட்டி மிக கடுமையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வேட்பாளர்கள் தேர்வில் பா.ஜ.,வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரே பாராட்டியது காங்கிரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து