பா.ஜ., - பா.ம.க., கூட்டணி: கே.பி.முனுசாமியின் பதில் என்ன?
"கூட்டணி தேவையில்லை என்றால், கட்சி பலத்தை வைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொள்வது தான் அ.தி.மு.க.,வின் வரலாறு" என, அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இணைந்துள்ளது. அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக, அ.தி.மு.க., கூட்டணிக்கு பா.ம.க., போகலாம் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இணைந்தது, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவு குறித்து அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, கே.பி.முனுசாமி கூறியதாவது:
அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி முறையாக முடிவு செய்யப்பட்டு, போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடக் கூடிய 40 வேட்பாளர்களை வரும் 24ம் தேதி பொதுச்செயலர் பழனிசாமி அறிமுகம் செய்து வைக்க உள்ளார்..ஜெயலலிதாவை, பிரதமர் மோடி புகழ்ந்து பேசுகிறார். ஆனால், அவரால் நியமிக்கப்பட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை இழிவாக பேசியுள்ளார். அவரை ஏன் மோடி கண்டிக்கவில்லை?
பா.ஜ.,வுடன் பா.ம.க., கூட்டணி வைத்ததற்கு தர்மம் பதிலை கொடுக்கும். இந்த தேர்தல் என்பது தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடக் கூடிய தேர்தலாக இருக்கும். தமிழகத்தில் தி.மு.க., அரசால் மக்கள் எவ்வளவு அவதிப்படுகின்றனர் என்பதை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்போம்.
எப்போதுமே தேவைப்படும் நேரத்தில் கூட்டணியை ஏற்றுக் கொள்வோம். கூட்டணி தேவையில்லை என்றால், கட்சி பலத்தை வைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொள்வது தான் அ.தி.மு.க.,வின் வரலாறு.
பல நேரங்களில் நாங்கள் தனியாக நின்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளோம். ஒவ்வொறு மேடையிலும், 'அ.தி.மு.க., அழிவதற்கு காரணமாக இருக்க மாட்டேன்' எனக் கூறி பன்னீர்செல்வம் தான், இன்று இரட்டை இலை கிடைக்காவிட்டால் முடக்குங்கள்' என்கிறார்.
தேர்தல் முடிவுக்கு பின் யார் யாரோடு மோதி வெற்றி பெறுகிறார்கள் என்பது தெரியும். அ.தி.மு.க.,வின் 30 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மையாக விளங்கியது. தமிழகத்தின் முதன்மையான இயக்கம் என்றால் அது அ.தி.மு.க., தான்.
இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.
வாசகர் கருத்து