'துரோகம் செய்த தி.மு.க.,': தூய்மை பணியாளர்கள் ஆத்திரம்

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாததால், தி.மு.க., அரசு மீது, இரண்டு லட்சம் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் கடுங்கோபத்தில் இருக்கின்றனர். வரும் லோக்சபா தேர்தலில், 'தி.மு.க.,வை புறக்கணிப்போம்' என்கிற கோஷத்தை முன்னெடுக்கின்றனர்.
தமிழக உள்ளாட்சி துறைகளில், நிரந்தர துாய்மை பணியாளர்கள், பதிலி தொழிலாளர்கள், என்.எம்.ஆர்., (தினக்கூலி) தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். என்.எம்.ஆர்., மற்றும் பதிலி தொழிலாளர்களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரந்தரம் செய்து வந்தனர். அ.தி.மு.க., ஆட்சியில், 2011ல் இந்நடைமுறை மாற்றப்பட்டு, ஒப்பந்த முறை கொண்டு வரப்பட்டது. இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த, 2021 சட்டசபை தேர்தலின்போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஒப்பந்த தொழிலாளர்களை கண்டிப்பாக நிரந்தரம் செய்வோம்' என, அக்கட்சியினர் வாக்குறுதி அளித்தனர். அதை நம்பி, தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்தனர்.
ஆனால், தமிழகம் முழுதும் உள்ள அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களிலும் துாய்மை பணியாளர் என்ற பணியிடமே கலைக்கப்படுவதாகவும், இனி அதை அவுட்சோர்சிங் செய்ய வேண்டும் எனவும் அறிவித்து, அரசாணை பிறப்பித்ததால், அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனால், மாநிலம் முழுதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் இரண்டு லட்சம் பேர், தி.மு.க., அரசு மீது கடுங்கோபத்தில் இருக்கின்றனர்.
தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் தமிழ்நாடு செல்வம் கூறியதாவது:
கடந்த 2021 தேர்தல் அளித்த வாக்குறுதியை தி.மு.க., நிறைவேற்றவில்லை. எங்களுக்கு துரோகம் செய்து விட்டனர். அதனால் அக்கட்சியைப் புறக்கணிக்கிறோம். இது தொடர்பாக துண்டுப் பிரசுரங்களை துாய்மைப் பணியாளர்கள் வீடுகள் தோறும் வினியோகித்து, தி.மு.க.,வுக்கு வாக்களிக்காதீர்கள் என கேட்கப் போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து