மீதி 14,000 கோடி எங்கே : தேர்தல் பத்திர விவகாரத்தில் அமித்ஷா கேள்வி

"கறுப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது தடை விதிக்கப்பட்டதால், மீண்டும் கறுப்பு பணம் வந்துவிடுமோ என அஞ்சுகிறேன்" என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

லோக்சபா தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தேர்தல் பத்திர விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்த நிறுவனங்களின் பெயர், நன்கொடை பெற்ற கட்சிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி, "மிரட்டி பணம் பறிப்பதற்கென்றே மிகப் பெரிய படையை மோடி வைத்துள்ளார். என்றாவது ஒருநாள் பா.ஜ., அரசு அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட பின்னர், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், "காங்கிரசின் வங்கிக் கணக்கை முடக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், தேர்தல் பத்திரம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை பெற்ற பா.ஜ., மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அக்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும்" என்றார்.

இந்நிலையில், கறுப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

அமித்ஷா பேசியதாவது:

அரசியலில் கறுப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவே, தேர்தல் பத்திரம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கறுப்பு பணம் வந்துவிடுமோ என அஞ்சுகிறேன்.

இந்த திட்டத்தை ரத்து செய்ததைவிட சற்று மேம்படுத்தியிருக்கலாம் என நினைக்கிறேன். தற்போது தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டதால் மீண்டும் கறுப்பு பணம் நன்கொடையாக மாறும் வாய்ப்பு ஏற்படும். தேர்தல் பத்திரங்கள் வந்த பின்பு, காசோலையாக மட்டுமே தனி நபர்களும் நிறுவனங்களும் அளிக்க வேண்டிய நிலை இருந்தது.

முன்பெல்லாம் அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகள், ரொக்கமாக வழங்கப்பட்டன. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ., பெருமளவு ஆதாயம் அடைந்தது போன்று பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர். ராகுல் காந்தியும் இதை ஏதோ பெரிய கொள்ளை போல விமர்சனம் செய்துள்ளார். அவருக்கு இப்படியெல்லாம் யார் எழுதிக் கொடுத்தார்கள் என தெரியவில்லை.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.,வுக்கு 6,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மொத்தமாக அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த தொகை என்பது 20,000 கோடி. மீதி 14,000 கோடி எங்கே சென்றது. இதில், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு 1,600 கோடி கிடைத்துள்ளது. காங்கிசுக்கு 1,400 கோடியும் பாரதிய ராஷ்டிரிய சமிதிக்கு 775 கோடியும் கிடைத்துள்ளன. தி.மு.க.,வுக்கு 649 கோடி ரூபாய் வந்துள்ளது.

சொல்லப்போனால், தேர்தல் பத்திரங்கள் திட்டம் வந்த பிறகு, கட்சிக்கான நன்கொடைகளை பெறுவதில் ரகசியம் என்பதே இல்லாமல் போனது. அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுத்தவர், பெற்றவர் என அனைத்து விவரங்களும் தெளிவாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் நீண்டகாலமாகவே கட்சிக்கு 100 ரூபாய் வந்தால், வீட்டுக்கு 1000 ரூபாயை கொண்டு சென்றனர். தேர்தல் பத்திரங்கள் வந்த பின்பு தான், ரகசியம் என்பது இல்லாமல் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டது.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.


Mariadoss E - Trichy, இந்தியா
17-மார்-2024 04:51 Report Abuse
Mariadoss E நல்ல கேள்வி ஆனா நீங்க தான் பதில் சொல்லணும்? நீங்க கொண்டு வந்த திட்டம் தானே?
Mariadoss E - Trichy, இந்தியா
17-மார்-2024 04:48 Report Abuse
Mariadoss E "தேர்தல் பத்திரங்கள் திட்டம் வந்த பிறகு, கட்சிக்கான நன்கொடைகளை பெறுவதில் ரகசியம் என்பதே இல்லாமல் போனது. அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுத்தவர், பெற்றவர் என அனைத்து விவரங்களும் தெளிவாக உள்ளன" கரெக்ட் ஆனா எப்போ big boss? கோர்ட் தலையிட்ட பின்னர் தானே? அப்புறம் என்ன சும்மா அடிச்சி விடுறிங்க...
K.n. Dhasarathan - chennai, இந்தியா
16-மார்-2024 17:09 Report Abuse
K.n. Dhasarathan முதலில் பி.ஜே.பி காய் பற்றிய 6200 கோடிக்கு கணக்கு சொல்லுங்கள்