விரைவில் உறுதியான கூட்டணி: ஜெயக்குமார் நம்பிக்கை
"தேர்தல் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. விரைவில் அ.தி.மு.க., தலைமையில் உறுதியான கூட்டணி அமையும்" என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜெயக்குமார் கூறியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் மீது வழக்கு தொடர்வதையே ஒரு வேலையாக தி.மு.க., அரசு வைத்திருக்கிறது. போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, டி.ஜி.பி., ஆகியோர் புகைப்படம் எடுத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதுவரை எந்த விளக்கத்தையும் முதல்வர் ஸ்டாலின் அளிக்கவில்லை. ஆனால், விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்ட அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் அவர்கள் செய்த ஒரே வேலை, எதிர்க்கட்சிகள் மீது வழக்கு போட்டது மட்டும் தான். இந்த வழக்கை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம்.
தேர்தல் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. விரைவில் அ.தி.மு.க., தலைமையில் உறுதியான கூட்டணி அமையும். அ.தி.மு.க.,வுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்தவகையிலும் சம்பந்தம் இல்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக அவர் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து