எங்கள் குரலை முடக்க முடியாது: அவதூறு வழக்குக்கு அண்ணாமலை பதில்
"தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறியதற்காக என் மீது முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். எங்கள் குரலை முடக்க முடியாது" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் தன்னை தொடர்புபடுத்தி அவதூறு செய்வதாக கூறி அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின், இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், முதல்வர் சார்பாக இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மனுவில், 'போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் 8ல் செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, இந்த விவகாரத்தில் என்னையும் தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.
இதே விவகாரம் குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் என்னை தொடர்புபடுத்தி பதிவிட்டிருந்தார். என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
முன்னாள் தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக்கின் கும்பல் பிடிபட்டு ஒரு மாதம் ஆகிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக கூறியதற்காக என் மீது முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
மக்களுக்கு தி.மு.க., ஆட்சியின் அவலம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது. மக்கள் மத்தியில் உங்கள் ஆட்சியின் அவல ஆட்சியை அம்பலப்படுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து