பா.ஜ., 2வது வேட்பாளர் பட்டியல்: யார்... யாருக்கு வாய்ப்பு?
லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடக் கூடிய 2வது வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. நாக்பூரில் நிதின் கட்கரியும் ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாரும் போட்டியிட உள்ளனர்.
பா.ஜ., சார்பில் தேர்தலில் போட்டியிடக் கூடிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல், கடந்த 2ம் தேதி வெளியானது. 195 தொகுதிகளுக்கான இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா காந்தி நகரிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது 72 தொகுதிகளுக்கான அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், பீஹார், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை பா.ஜ., அறிவித்துள்ளது.
இதில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரிலும் மும்பை வடக்கு தொகுதியில் பியூஷ் கோயலும் போட்டியிட உள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹவேரி தொகுதியில் களமிறங்க உள்ளார். ஹரியானா முதல்வராக இருந்து சில நாள்களுக்கு முன் பதவி விலகிய மனோகர் லால் கட்டார், கர்னால் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
பா.ஜ., இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, பெங்களூரு தெற்கு தொகுதியிலும் எடியூரப்பா மகன் ராகவேந்திரா, ஷிவ்மோகா தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். கர்நாடகாவின் தார்வாட் தொகுதியில் பிரகலாத் ஜோஷி போட்டியிடுகிறார். இமாச்சலில் உள்ள ஹமீர்புர் தொகுதியில் அனுராக் சிங் தாக்கூர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து