இலக்கை அடைய முடியாதது தான் காரணம்: சரத்குமார் விளக்கம்
"அரசியலில் நினைத்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற எண்ணத்துக்கு இந்த தேர்தல் ஞானோதயமாக அமைந்தது" என, பா.ஜ.,வில் இணைந்த நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.,வுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தது குறித்து, விரிவான அறிக்கை ஒன்றை நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்ததைப் பற்றி பலரும் பலவிதமாக சித்தரித்து வருவதால் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். 1996ம் ஆண்டு ஆட்சியில் இருந்தவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அக்கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்ய முடிவு செய்தது தான், என் அரசியல் பயணத்தின் துவக்கம்.
அரசியல் அனுபவம் அதிகம் இருந்தபோதும், அன்று நான் கொடுத்த ஒற்றை எதிர்ப்பு அறிக்கை, தி.மு.க., முன்னோடிகளை என் இல்லம் நோக்கி பயணிக்க வைத்தது.
எந்த ஒரு சுயலாபத்திற்காகவும் சுய நலனுக்காகவும் அல்லாமல் எந்த ஒரு அரசியல் சூழ்ச்சியும் அறியாமல், தி.மு.க.,வையும் த.மா.கா.,வையும் ஆதரித்து பிரசாரம் செய்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியதன் பங்கு என்னையும் என்னைச் சார்ந்த ரசிகர்களையும் சாரும்.
அதன் பிறகு கருணாநிதியால் அழைக்கப்பட்டு முதன்முறையாக ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆனேன். அரசியல் பாடம், அரசியல் அணுகுமுறை இவை அனைத்தையும் கருணாநிதியுடன் பயணித்ததில் கற்றுக் கொண்டேன். அங்கு நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க,.வில் என்னை இணைத்துக் கொண்டேன்.
தி.மு.க.,வில் இருந்து விலக காரணமாக இருந்த சிலரைப் போல், அ.தி.மு.க.,வில் இருந்தும் என்னை நீக்க வேண்டும் என சிந்தித்த சிலரால் அக்கட்சியில் இருந்தும் விலகினேன்.
அதன் பிறகு 2007ல் சமத்துவ மக்கள் கட்சி உருவானது. 16 ஆண்டுகள் அரசியல் பயணம். லோக்சபா உறுப்பினர், எம்.எல்.ஏ., என பயணித்து மக்கள் சேவையில் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன்.
எந்த ஒரு பேருதவியும் இல்லாமல், நான் நடித்து ஈட்டிய பொருளாதாரத்தின் அடிப்படையில், நேற்று வரை என் இயக்கத்தை நடத்தி மக்கள் பணியில் என்னை அர்ப்பணித்திருக்கிறேன். காமராஜர் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய வேண்டும் என செயல்பட்டிருக்கின்றேன்.
ஆனால், ஜனநாயகம் குறைந்து, பணநாயகம் மேலோங்கிய அரசியலில் நாம் நினைத்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற என் சிந்தனைக்கு, இந்த லோக்சபா தேர்தல் ஞானோதயமாக அமைந்தது. காரணம், தேர்தல் வரும் போதெல்லாம், எந்த கட்சியுடன் கூட்டணி, எத்தனை இடங்கள் தரப்போகிறார்கள் என்ற பேச்சு தான் மேலோங்கி நிற்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதனால் தான், தமிழக மக்களுக்காகவும் தேசத்தின் ஒற்றுமைக்காகவும் தேசத்தின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து