கமல்நாத்தை பா.ஜ., சேர்க்காதது ஏன்?
மத்திய பிரதேச அரசியலில்,முக்கியஸ்தர்களான சுரேஷ் பச்சோரியை பா.ஜ.,வில் சேர்த்துக் கொண்டதற்கும், கமல்நாத்தை சேர்க்காமல் விட்டதற்கும் சிறப்பான காரணங்கள் இருப்பதாக அம்மாநில அரசியல் வட்டாரங் களில் பேசப்படுகிறது.
சுரேஷ் பச்சோரி, 70, 80களில் இந்திரா குடும்பத்தின் ஆதரவில் டில்லியில் இருந்தபடி, சொந்த மாநிலமான ம.பி., உள்ளிட்ட பல மாநில கட்சியினருக்கு காரியங்களை முடித்துத் தந்தவர். முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவின் துாரத்து சொந்தம். அவர் வீட்டிலேயே இருந்தபடிஅரசியல் கற்றுக் கொண்டவர்.
நான்கு முறை ராஜ்யசபா எம்.பி., ஆகவும், நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் அமைச்சரவைகளில் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். ஆனால் நேரடியாக தேர்தல் அரசியலில் இறங்காதவர்.
தற்போது, சோனியா குடும்பத்தின் ஆதரவை இழந்து விட்டார். டில்லியில் தன் காரியங்களை முடிக்க வழியின்றி தவித்த 71 வயதான சுரேஷ் பச்சோரி, வேறு வழியின்றி பா.ஜ.,வில் இணைந்தார்.
அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது செய்த முறைகேடுகள் பா.ஜ.,வுக்கு தெரியாமல் இல்லை. பா.ஜ.,வில் ஒப்புக்கு சப்பாணியாகத் தான் வைக்கப்படுவார்.
அதே நேரத்தில் கமல்நாத், மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர். கடந்த 1977 முதல், சிந்த்வாரா தொகுதி அவருடைய களம்தான். மற்ற அரசியல்வாதிகளைப் போல் அல்லாமல், தொழிலதிபராக இருந்து அரசியலுக்கு வந்தவர்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த பின், பா.ஜ.,வில் சேர துாது விட்டார். தன்னுடன், கட்சியின் பல நிலைகளில் உள்ள, 250க்கும் மேற்பட்ட முக்கிய தலைகளையும் அழைத்து வருவதாக பட்டியலும் கொடுத்தார்.
ஆனால், இந்திரா கொலைக்குப் பின் நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் இவருக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இவரைச் சேர்த்தால், சீக்கியர்களின் கோபத்தை சந்திக்க நேரிடும். மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில், 28 பா.ஜ., வசம் உள்ளது. சிந்த்வாரா மட்டும் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் எம்.பி.,யாக உள்ளார்.
கட்சிக்கு வந்தாலும், மகனுக்குத்தான் அந்த தொகுதியை கமல்நாத் கேட்பார். அதனால், அத்தொகுதியை இழந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு பா.ஜ., வந்துவிட்டது. பா.ஜ., போட்ட கணக்கின்படி கமல்நாத்தின் ஆதரவாளர்கள் கொத்துக்கொத்தாக பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர்.
மூத்த அரசியல் தலைவர் என்பதால், கட்சியில் பெரிய பதவியைத் தர வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால், பா.ஜ., ஆர்வம் காட்டவில்லை. வேறுவழியின்றி கட்சி மாறும் முடிவை மாற்றி, கமல்நாத் பதுங்கியுள்ளார்.
வாசகர் கருத்து