தெலுங்குதேசம் - பா.ஜ., கூட்டணி: ஜெகன்மோகன் ரெட்டி காட்டம்
தெலுங்கு தேசம் - பா.ஜ., இடையே தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. "தெலுங்குதேசம் கட்சியின் சைக்கிள் செயின் துருப்பிடித்துவிட்டதால், அதனை சீராக்குவதற்காக சந்திரபாபு நாயுடு டெல்லி சென்றார்" என, ஜெகன்மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் என இரண்டு தேர்தலும் அடுத்த மாதம் நடக்க உள்ளது. அங்கு 25 லோக்சபா தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் நடிகர் பவன் கல்யணின் ஜனசேனா கட்சியுடன் பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் இருவரும் டில்லியில் பா.ஜ., தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினர்.
இந்நிலையில், ஆந்திராவில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் தெலுங்கு தேசம் 17 தொகுதிகளிலும், ஜனசேனா 2 தொகுதிகளிலும் பா.ஜ., 6 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன.
இது குறித்து பேசியுள்ள சந்திரபாபு நாயுடு, "ஆந்திர மாநிலம் மிக மோசமாக அழிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வுடன் இணைவதன் மூலம் நாட்டுக்கும் மாநிலத்துக்கும் வெற்றிகரமான சூழலை உருவாக்கும்" என்றார்.
இதனை விமர்சித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, " ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் சைக்கிள் செயின் சீராக இயங்கவில்லை. அதனை ஓடவைப்பதற்காக மத்தியில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக அவர் டெல்லிக்கு சென்றார். அவர்களின் கூட்டணியை எதிர்த்துப் போராட தயாராக இருக்கிறோம்" என்றார்.
வாசகர் கருத்து