பா.ஜ.,வுடன் ச.ம.க.,வை இணைத்தது ஏன்: சரத்குமார் விளக்கம்
பா.ஜ.,வுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பதாக அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் அறிவித்திருக்கிறார். 'மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு இது' எள, சரத்குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் தமிழக பா.ஜ.,வுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் பா.ஜ., மேலிட தலைவர்கள் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளதாக நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ' பா.ஜ.,வின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், கடந்த பிப்., 28ம் தேதி என்னை நேரில் சந்தித்து கூட்டணி தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார். அதில், ஒருமித்த கருத்துகள் ஏற்பட்டதால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் குழுவாக வந்து சந்தித்தனர்.
அவர்களுடன் நடந்த இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. நாடு வளம் பெற, ஒற்றுமை உணர்வு ஓங்கி, மீண்டும் மோடி தலைமையில் நல்லாட்சி அமையும் வகையில் பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விவரங்களை ஒரு வார காலத்துக்குள் தெரிவிக்கிறேன்' எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, எந்தெந்த தொகுதிகளில் ச.ம.க., போட்டியிடும் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், பா.ஜ.,வுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பதாக சரத்குமார் அறிவித்திருக்கிறார். தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., அலுவலத்தில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இந்த இணைப்பு நடந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறுகையில், "தமிழகத்துக்குள் சரத்குமாரை அடைத்து வைக்க விரும்பவில்லை. தேசியத்துக்கு அவர் தேவைப்படுகிறார்" என, குறிப்பிட்டார்.
இதுகுறித்து, சரத்குமார் கூறியதாவது:
காமராஜரை போல பிரதமர் மோடி ஆட்சியமைத்து வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்காக சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.,வுடன் இணைந்துள்ளோம். ஒவ்வொரு தேர்தலின் போதும் சஞ்சலத்தில் இருந்தேன். எத்தனை இடங்கள் வேண்டும் என கோரிக்கை வைப்பது மட்டும் தான் பாதையா என யோசித்தேன். தற்போது, இளைஞர்களின் நலனுக்காக, மக்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன். எங்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆதரவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. ஒரு எழுச்சியின் தொடக்கம். எங்களின் சக்தியை மிகப் பெரிய சக்தியுடன் இணைத்திருக்கிறோம். 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதற்கேற்ப, எங்கள் உழைப்பு இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து