கூட்டணி இல்லேன்னா 40லும் போட்டி: அ.தி.மு.க.,
அ.தி.மு.க., கூட்டணியில் இணைய, பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள் வராவிட்டால், சிறிய கட்சிகளை இணைத்துக் கொண்டு, 40 லோக்சபா தொகுதிகளிலும், தனித்து போட்டியிட அ.தி.மு.க., தலைமை முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறியதும், அ.தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என, அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்தார்.
'தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டு, கட்சிகள் வெளியேறினால், தங்கள் பக்கம் வரும். ஏற்கனவே அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த, பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளும் வரும். அவற்றுடன் சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மை அமைப்புகளை இணைத்து, மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கலாம்' என அ.தி.மு.க., முடிவு செய்தது.
ஆனால், தி.மு.க., கூட்டணியில் இருந்து, எந்த கட்சியும் வெளியேறவில்லை. அ.தி.மு.க., பலவீனப்பட்டுள்ளதால், அக்கட்சியுடன் சேர, பா.ம.க., - தே.மு.க., போன்றவை, அதிகம் எதிர்பார்க்கின்றன. எனினும், பலமான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினர், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா வீட்டிற்கே சென்று பேசினர். எனினும் இதுவரை எந்த முடிவையும் தே.மு.தி.க., எட்டவில்லை.
பா.ம.க., தரப்பில் பா.ஜ., உடன் பேச்சு நடந்து வருகிறது. இது அ.தி.மு.க., தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போதைய நிலையில், புதிய தமிழகம், புரட்சி பாரதம், இந்திய தேசிய லீக் போன்ற கட்சிகளுடன், அ.தி.மு.க., கூட்டணி பேச்சு நடத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து, 'தே.மு.தி.க., - பா.ம.க., போன்ற கட்சிகள் வந்தால், கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். வரவில்லை என்றால், புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளிலும், தனித்து போட்டியிடுவது; சிறிய கட்சிகளுக்கு, ஒன்றிரண்டு தொகுதிகளை வழங்குவது; அக்கட்சி வேட்பாளர்களையும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைப்பது' என, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
ஏற்கனவே 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்டு, 37 இடங்களில் வெற்றி பெற்றது. எனவே, கூட்டணியில் பெரிய கட்சிகள் வராவிட்டால், இம்முறை தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
இதன் வழியே எங்களின் ஓட்டு சதவீதத்தையும் அறிந்து கொள்ள முடியும். இது சட்டசபை தேர்தல் வெற்றிக்கு உதவியாக இருக்கும். எனவே, கூட்டணி குறித்து, எங்கள் தலைமை கவலைப்படவில்லை. வேட்பாளர் பட்டியலும் தயாராகி வருகிறது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து