பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சு இல்லை: பிரேமலதா

"பா.ஜ., வுடன் கூட்டணி குறித்து தே.மு.தி.க., ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை" என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு, வேட்பாளர்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.
அ.தி.மு.க, தரப்பில், கூட்டணிக் கட்சிகளுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில், தே.மு.தி.க.,வின் பேச்சுவார்த்தை குழுவிடம், அ.தி.மு.க., நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், 'ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும்' என நிர்பந்தம் கொடுப்பதாக கூறப்பட்டது. இதனால், அ.தி.மு.க., உடனான கூட்டணி பேச்சில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதற்கிடையில், பா.ஜ.,வுடன் தே.மு.தி.க., பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. குறிப்பாக, பா.ஜ., முக்கிய தலைவர்களை இன்று சந்திக்க தே.மு.தி.க., தரப்பில் நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், "பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை" என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்துள்ளார். "அ.தி.மு.க.,வுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடக்க உள்ளது. அடுத்த கட்ட முடிவுகள் விரைவில் தெரிவிக்கப்படும்" என, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து