கமலின் முடிவு, அவரது கஷ்டத்தை காட்டுகிறது: அண்ணாமலை
"தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கு மத்தியில் செயல்படுவது எவ்வளவு கஷ்டம் என்பதை கமலின் முடிவு வெளிக்காட்டியுள்ளது" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பா.ஜ., களமிறங்கியுள்ளது. அரசியலில் மாற்றத்தை விரும்புகிறவர்களுக்கான ஒரே கட்சியாக பா.ஜ., உள்ளது.
தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது அந்தந்த கட்சிகளின் நிலைப்பாடு. தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது என்பது கமலின் முடிவு. இனி, தி.மு.க.,வின் நிலைப்பாட்டில் தான் கமல் செல்ல வேண்டும். தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கு மத்தியில் செயல்படுவது எவ்வளவு கஷ்டம் என்பதை கமலின் முடிவு வெளிக்காட்டியுள்ளது.
2021 சட்டசபை தேர்தலில் யாரை எதிர்த்து கமல் பிரசாரம் செய்தாரோ, இன்று அவர்களுடன் கூட்டணிக்கு சென்றுள்ளார். அவர்கள் ஓட்டு போட்டு தான் கமல் எம்.பி., ஆக தேர்வாக போகிறார்.
ஜாபர் சாதிக் கைது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு இரண்டு பக்கங்களுக்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அவரை, 'திரைப்பட தயாரிப்பாளர், போதைப் பொருள் கடத்தியவர்' என செய்தித்தாள்களில் வெளியிட்டுள்ளனர். ஆனால், அவர் சார்ந்த கட்சி பெயரை எங்கேயும் போடவில்லை. இதுவே பா.ஜ.,வை சேர்ந்த ஒருவராக இருந்திருந்தால் பெரிய எழுத்தில் செய்தியாக வெளியிட்டிருப்பார்கள்.
இந்தியாவில் தேர்தல் ஆணைய அதிகாரிகள், பதவியை ராஜினாமா செய்வது ஒன்றும் புதிதல்ல. அருண் கோயலுக்கு 2027 வரையில் பதவிக்காலம் இருந்தது. அடுத்து, தலைமை தேர்தல் ஆணையராக வருவதற்கும் அவருக்கு வாய்ப்பு இருந்தது.
தன்னுடைய ராஜினாமா குறித்து அருண் கோயல் எந்தக் கருத்தையும் கூறவில்லை. அப்படியிருக்கும்போது, நான் ஒரு கருத்தை தெரிவிப்பது சரியல்ல. அவர் தெரிவிக்காத வரையில் யாரும் கருத்து கூற முடியாது என்பதுதான் என் கருத்து.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
வாசகர் கருத்து