தனிச்சின்னம் எனும் தூக்குக்கயிறு!

தனிச் சின்னத்தில் போட்டியிடும் ஆசை, ஒவ்வொரு கட்சிக்கும் மீண்டும் தலைதுாக்கியுள்ளது. குறிப்பாக, தி.மு.க., கூட்டணியில் வி.சி., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு இந்த முறை, அவர்களுடைய சொந்த சின்னத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை ஒரு சாதனையாகவே இந்தக் கட்சிகள் வெளியில் சொல்லி வருகின்றன.

உண்மையில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டது ஏன்? இதனால், இந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏதேனும் பலன் இருக்குமா என்பதைப் பற்றி, தி.மு.க.வைச் சேர்ந்தசிலரிடம் பேசினோம்.

'இவர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி இருக்கிறார். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கடந்த 2019 தேர்தலிலேயே, ராமநாதபுரத்தில், அவர்களுடைய சொந்த சின்னமான 'ஏணி' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

அது பல வகைகளில் அவர்களுக்கு உபயோகமாக இருந்தது. அது போன்றே தாமும் சொந்த சின்னத்தில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கை கூட்டணிக் கட்சிகளின் மத்தியில் எழுந்தது.

சட்டம் சொல்வது என்ன?



விடுதலைச் சிறுத்தைகளின் ரவிக்குமார் கடந்த முறை, விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் சில சிக்கல்களை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. வேறொரு கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக வெளிப்படையாக தெரியக்கூடிய ஒருவர், இன்னொரு கட்சியின் உறுப்பினராக இருந்து பார்லிமென்ட் உறுப்பினராக இருப்பது எப்படி என்று கேள்வி கேட்கப்பட்டது.

இது தொடர்பாக சிலர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு போட்டனர். ஆனால், வழக்கு முடிவு எதிராகப் போகாததால், அப்போதைக்கு ரவிக்குமார்போன்றோர் தப்பித்தனர்.

அப்போது தப்பியவர்களுக்கு மீண்டும் அதே சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற காரணத்தாலேயே, இந்த முறை ம.தி.மு.க.,வுக்குச் சொந்தச் சின்னமான பம்பரத்திலும், விடுதலைச் சிறுத்தைகளுடைய பானை சின்னத்திலும் அவர்கள் போட்டியிட விரும்பினர். விடாப்பிடியாக அதை தி.மு.க.,விடம் சொல்லி, அக்கட்சியின் ஒப்புதலையும் பெற்று விட்டனர்.

பம்பரம் சுற்றுமா?



தி.மு.க.வைப் பொறுத்தவரை, இது எங்களுக்கு மிகவும் ரிஸ்க்கான முடிவு தான். அவர்களுடைய சொந்த சின்னத்தை வாக்காளர்களில் எவ்வளவு பேர் ஞாபகம் வைத்துக்கொண்டு இருப்பர் என்பதை சொல்ல முடியாது. அப்படியே ஞாபகம் இருந்தாலும், அந்த சின்னத்தில் ஓட்டளிக்க முன் வருவரா என்பதும் தெரியாது.

இனிமேல் தான், அவர்களுடைய சின்னத்தை மக்களிடம் பிரபலமாக்க வேண்டும். அதை வைத்து தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலாவது போட்டியிடப் போகும் திருமாவும், ரவிக்குமாரும் ஏற்கனவே அந்தந்த தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள். அவர்களுக்கு புதிதாக அறிமுகம் தேவையிராது. ஆனால், ம.தி.மு.க., நிலை சிரமமானது. வைகோவின் மகன் துரை வையாபுரி புது வேட்பாளர். பம்பரத்தையும், புது வேட்பாளரையும் சேர்த்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

சின்னம் ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை என்று வெளியில் பேசலாம். ஆனால், பல ஆண்டுகளாக மக்கள் மனதில் ஆழ வேரூன்றியவை சின்னங்கள். இந்த நிலையில், தி.மு.க., பெரிய ரிஸ்க்கைத் தான் எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)