பா.ஜ., தலைமை 'சிக்னல்' பன்னீர்செல்வம் சுறுசுறு
பா.ஜ., கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ள, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கூட்டணி குறித்து பேச்சு நடத்த குழு அமைத்துள்ளதுடன், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம், இன்று விருப்ப மனு பெறப்படும், மாலையே நேர்காணல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு' என்ற அமைப்பை ஏற்படுத்தி, தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், பா.ஜ., தரப்பில் கூட்டணிக்கு அழைக்காமல், காலதாமதம் செய்து வந்தனர்.
இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல், பன்னீர்செல்வம் திணறினார். அவரது ஆதரவாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், பா.ஜ.,வை எதிர்பார்க்காமல், தேர்தல் பணிகளை துவக்கும்படி, பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி கொடுத்தனர்.
இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க., உடன் கூட்டணி இல்லை என்பது உறுதியானதும், பன்னீர்செல்வத்திற்கு கூட்டணி தொடர்பாக பா.ஜ., சிக்னல் கொடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, நேற்று கூட்டணி குறித்து பேச்சு நடத்த, முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., - ஜெ.சி.டி.பிரபாகர், எம்.எல்.ஏ.,மனோஜ் பாண்டியன், எம்.பி., தர்மர், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் கொண்ட குழுவை, பன்னீர்செல்வம் அமைத்துள்ளார்.
மேலும், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் போட்டியிட விரும்புவோர், சென்னை, மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் உள்ள கூட்ட அரங்கில், இன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்ப கட்டணம் 10,000 ரூபாய். அதை செலுத்தி விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து உடனே வழங்க வேண்டும். மாலை 6:00 மணிக்கு நேர்காணல் நடக்கும் என, பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
நேர்காணல் நடத்த, பன்னீர்செல்வம் தலைமையில், ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பன்னீர்செல்வம் சுறுசுறுப்பாக அறிவிப்புகளை வெளியிட்டது, அவரது ஆதரவாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து