பா.ஜ.,வின் அல்வா, பழம் தி.மு.க.,வின் வடைக்கு பதிலடி
'பிரதமர் மோடி அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவார். செயலில் ஒன்றும் செய்ய மாட்டார்' என்ற கருத்தில் 'மோடி சுட்ட வடை' என அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களுடன் பொதுமக்களுக்கு தி.மு.க.,வினர் வடை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரசாரத்தால் பா.ஜ., தரப்பு கோபமடைந்தது. இன்னொரு பக்கம், மோடி தான் தி.மு.க., வாயிலாக தங்களுக்கு வடை கொடுக்க சொன்னார் என, பொதுமக்கள் பேச ஆரம்பித்தனர். இதனால் அந்தப் பிரசாரத்தை நிறுத்தும்படி தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே தி.மு.க., பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அனைத்து ரேஷன் கார்டுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய், காஸ் மானியம் வழங்காதது ஆகியவற்றை குறிப்பிட்டு, போதை ஒழிப்பு, மணல் கொள்ளை தடுத்தல் போன்றவற்றில் தோல்வி பெற்ற அரசை கண்டிப்பதாக கூறி, துண்டு பிரசுரங்களுடன் பா.ஜ.,வினர் களம் இறங்கினர்.
இதற்காக திண்டுக்கல்லில், தி.மு.க., அரசின் தோல்விகளை பட்டியலிட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்துடன் பா.ஜ.,வினர் அல்வா கொடுத்து பிரசாரம் செய்தனர்.
அதேபோல், கோவை மாநகர பா.ஜ., பட்டியல், ஓ.பி.சி., அணி மற்றும் வர்த்தக பிரிவினர் சிவானந்தா காலனி பஸ் ஸ்டாண்ட் அருகே பொதுமக்களுக்கு வாழைப்பழம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இப்படி பா.ஜ.,வினரிடம் அல்வா மற்றும் வாழைப்பழம் வாங்கி சாப்பிடும் வாக்காளர்களிடம், 'வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட்டால் மறுபடியும் அல்வா, வாழைப்பழம் கொடுத்து விடுவர்' எனச் சொல்லி பிரசாரம்செய்கின்றனர்.
வாசகர் கருத்து