மகளிர் தினம்... சமையல் காஸ் விலை ரூ.100 குறைப்பு: எதிர்க்கட்சிகள் கொதிப்பு

வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 'தேர்தலுக்காகவே இப்படியொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது' என, எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
நாடு முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டரின் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மகளிர் தினத்தை கொண்டாடும் நமது பெண்களுக்கு பரிசளிக்கும் விதமாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாக குறைக்கும். குறிப்பாக, நமது பெண் சக்திக்கு பயனளிக்கும்.
சமையல் காஸ் சிலிண்டரை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாக வைத்துள்ளோம். மத்திய அரசின் நோக்கம், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் வாழ்வை எளிதாக்குவது ஆகியவற்றில் உறுதியாக உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மிகப் பெரிய பரிசு
பிரதமரின் அறிவிப்பு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், " வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச காஸ் இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி கொடுத்து வருகிறார். இன்று காஸ் விலை அதிகமாக இருப்பதால் பல குடும்பங்களில் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. தற்போது 100 ரூபாய் குறைந்திருப்பது என்பது மகளிர் தினத்தில் சகோதரிகளுக்கும் தாய்மார்களுக்கும் பிரதமர் கொடுத்திருக்கும் மிகப் பெரிய பரிசு" எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கொதிப்பு
சமையஸ் காஸ் சிலிண்டர் விலை குறைப்பு குறித்து பேசியுள்ள தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தலுக்காகவே இந்த அறிவிப்பை மத்திய பா.ஜ., அரசு வெளியிட்டுள்ளது. ரூ.450 ஆக இருந்த சிலிண்டர் விலையை 1100 ரூபாயாக உயர்த்தியது, மத்திய அரசு தான். தற்போது 100 ரூபாயை குறைத்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் 400 ரூபாயை உயர்த்திவிடுவார்கள்" என்றார்.
வாசகர் கருத்து