கமலுக்கு வலை வீசும் பா.ஜ., தலைமை சுற்றியிருப்போர் போடும் தடுப்பு வேலி

இரு தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு 3 சதவீத ஓட்டுகளை வாங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி, வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவெடுத்து உள்ளது. தொடர்ந்து தி.மு.க., தலைமை மற்றும் அக்கட்சியினரோடு நெருக்கமாக இருந்து வரும் ம.நீ.ம., தலைவர் நடிகர் கமல், வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுடன் போட்டியிட்டு தேர்தலை சந்திப்பது என முடிவெடுத்துள்ளார்.
அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையே இன்னும் ஒப்பந்தம் ஏற்படவில்லை.
அசைன்மென்ட்
இதற்கிடையில், இரு கட்சிகளுக்கும் இடையே குழப்பம் நீடிப்பதால், கமல் அதிருப்தி அடைந்துள்ளார். அந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் பரவ, கமலை, பா.ஜ., கூட்டணி பக்கம் கொண்டு செல்ல அரசியல் தலைவர்கள் சிலர் ஆர்வப்பட்டு, அதற்கான முயற்சியில் இறங்கினர்.
குறிப்பாக, பா.ஜ.,வின் முக்கிய தலைவரான அமித் ஷா, கமலை தொடர்பு கொண்டு பேசுமாறு, சிலருக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளார். அதோடு நடிகர் கமலை தொடர்பு கொண்டு, அவரிடம் அமித் ஷா தன் விருப்பத்தைச் சொல்ல பல வழிகளிலும் முயற்சி மேற்கொண்டார். ஆனால், அது தோல்வியில் முடிந்துள்ளது.
அமித் ஷா கொடுத்த அசைன்மென்ட்டை அடுத்து, கமலை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாதவர்கள், ம.நீ.ம., கட்சியின் முக்கிய தலைவர்களாக இருப்போரிடம் விஷயத்தை சொல்லியும், அந்தத் தகவல் கமலுக்குப் போய் சேரவில்லை.
இது குறித்து, பா.ஜ., தரப்பில் கூறியதாவது:
முயற்சி
கமல் போன்ற பிரபலங்களை கூட்டணிக்குள் கொண்டு வருவதன் வாயிலாக, கூட்டணிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என அமித் ஷா எதிர்பார்க்கிறார். அதனால், அவரை பா.ஜ., கூட்டணிக்குள் கொண்டு வர, சிலர் வாயிலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தி.மு.க., கூட்டணியில் அவருடைய எதிர்பார்ப்புக்கு முக்கியத்துவம் தராத நிலையில், அது சாத்தியப்படும் என நம்பப்பட்டது.
ஆனால், அவரைக் காட்டிலும், அவரைச் சுற்றியிருப்போர், கமல் தி.மு.க., கூட்டணியில் தான் இடம் பெறுவார் என, தாங்களாகவே முடிவெடுத்து, அவரை வேறு தரப்பில் இருந்து யாரும் தொடர்பு கொள்ளாதபடி செய்து வருகின்றனர்.
இவ்வாறு அத்தரப்பில் கூறுகின்றனர்.
வாசகர் கருத்து