10வது முறையாக வேட்பாளர் : 'சிற்றரசருக்கு' சிக்குமா சீட்?
தஞ்சாவூர், லோக்சபா தொகுதியில், தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, மன்னார்குடி, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி என ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 1952ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை, 19 முறை தேர்தல்கள் நடந்துள்ளன.
இவற்றில் ஒன்பது முறை காங்கிரஸ் கட்சியும், இரண்டு முறை அ.தி.மு.க.,வும், எட்டு முறை தி.மு.க.,வும் வெற்றி பெற்றுள்ளன. தி.மு.க., சார்பில், ஒன்பது முறை போட்டியிட்ட பழனி மாணிக்கம், ஆறு முறை வெற்றி பெற்று எம்.பி.,யானார்.
வரும் தேர்தலில், தஞ்சாவூர் தொகுதி பெண்களுக்கு தான் என்ற தகவல் வெளியானது. மன்னார்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியான ராதிகா, தேர்தல் செலவை தான் ஏற்றுக்கொள்ளுவதாக கூறி விருப்ப மனு போட்டுள்ளார்.
இருப்பினும், தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம், சிட்டிங் எம்.பி., பழனிமாணிக்கம், திருவோணம் முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ் கிருஷ்ணசாமி என பலரும் வேட்பாளராகத் துடிக்கின்றனர்.
கடைசி நேர சமாளிப்பு
இதற்கிடையில் தற்போது எம்.பி.,யாக இருக்கும் பழனிமாணிக்கம் கட்சி நிர்வாகிகளை அனுசரிப்பதில்லை என்றாலும், தேர்தல் சமயத்தில் தன் மீதுள்ள அதிருப்திகளை சரி செய்து கம்பீரமாக தேர்தலை எதிர்கொள்வார் என கட்சியினர் கூறத் துவங்கி உள்ளனர்.
தேர்தலில் செலவு செய்வதற்கு பழனிமாணிக்கத்தை விட்டால் கட்சியில் வேறு ஆளில்லை. இம்முறை பா.ஜ.,வை வென்று விட வேண்டும் என கட்சி தலைமையும் உறுதியாக இருப்பதால், பழனிமாணிக்கத்திற்கு மீண்டும் போட்டியிட 10வது முறையாக வாய்ப்பளிக்கப் போவதாகக் கூறுகின்றனர்.
இதற்கிடையில், கிச்சன் கேபினட், அமைச்சர் உதயநிதி என பலரையும் சந்தித்து விட்டதாகவும் அதனால் தனக்குத்தான் சீட் என்றும், உற்சாகமாக தேர்தல் வேலைக்கு தன்னுடைய ஆதரவாளரை களம் இறக்கி விட்டுள்ளார் பழனிமாணிக்கம்.
அசராமல் ஆஜராகிறார்
அதை உறுதி செய்யும் வகையில், இதுவரை தொகுதி பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்த அவர், தற்போது கட்சி நிகழ்ச்சி முதல் அரசு நிகழ்ச்சி வரை ஒன்றையும் விட்டு வைக்காமல் ஆஜராகி விடுகிறார்என்கின்றனர் கட்சியினர்.
தி.மு.க.,வில் ஒருமுறை எம்.பி., - எம்.எல்.ஏ., ஆனவர்களுக்கு தொடர்ந்து பலமுறை அந்தப் பதவிகளுக்காக வாய்ப்புகள் அளிக்கப்படுவதால், அது சிற்றரசர்களின் கட்சி என்ற விமர்சனம் கருணாநிதிகாலத்தில் இருந்தது.
அது உண்மைதான் என்று நினைக்கும் அளவுக்கு, இன்றும் நிலைமையில் ஒரு மாற்றமும் இல்லை எனப் புலம்புகின்றனர், தஞ்சாவூரில் இருக்கும் கட்சியின்ஆதிகாலத் தொண்டர்கள்.
வாசகர் கருத்து