Advertisement

பா.ஜ., பக்கம் சாயும் கொங்கு சமுதாய ஓட்டுகள்: அ.தி.மு.க., - தி.மு.க., கலக்கம்

லோக்சபா தேர்தலில் கொங்கு சமுதாய ஓட்டுகள், பா.ஜ., பக்கம் மடைமாறலாம்' என்ற தகவலால் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொங்கு மண்டலம் என கூறப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சியில் குறிப்பிட்ட பகுதியில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். அவர்களது உட்பிரிவுகள் மற்றும் அதை தழுவிய பெயர்களில் உள்ளவர்களும், 'கவுண்டர்' சமூகமாக கருதப்படுகின்றனர்.

இப்பகுதி கவுண்டர் ஓட்டுக்கள், அ.தி.மு.க., பக்கமே அதிகமாக தழுவி இருந்தது. தி.மு.க., - காங்., உட்பட பிற கட்சிகளில் அச்சமூகத்தினர் இருந்தாலும், குறைந்த அளவிலேயே அவர்களது ஆதிக்கம் காணப்படுகிறது.

கடந்த, 2009ல் கொங்கு வேளாளர் பேரவை என்ற இச்சமுதாய அமைப்பை, கொங்குநாடு முன்னேற்ற கழகம் என அரசியல் கட்சியாக பதிவு செய்து, 2009 லோக்சபா தேர்தலில், 12 இடங்களில் போட்டியிட்டு, 5.80 லட்சம் ஓட்டுக்களை பெற்றனர். அங்கு வெற்றி பெறாவிட்டாலும், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு தொகுதியில் அதிகமாகவும், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் அதைவிட சற்று குறைந்த ஓட்டும் பெற்றனர்.

கூட்டணி வைத்ததில் முரண்பாடு, தலைவர்களுக்குள் பிரச்னை என அக்கட்சி உடைந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை ஈஸ்வரன் துவங்கியதும், பிற அமைப்புகள் அமைதியானது. கடந்த, 2019 முதல் தி.மு.க., கூட்டணியில் உள்ள கொ.ம.தே.க., நாமக்கல் எம்.பி., தொகுதியையும், 2021ல் திருச்செங்கோடு சட்டசபை தொகுதியையும் வென்றது. ஆனால், தான் சார்ந்த சமூகத்துக்காக ஏதும் செய்யாமல், குறிப்பிட்ட குடும்பங்கள் மட்டும் வளர கொ.ம.தே.க., முன்னுரிமை அளிப்பதாக புகார் எழுந்ததால், அச்சமூகத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.

இருப்பினும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, இச்சமூக மக்கள், அ.தி.மு.க., மீது தனி அபிப்ராயம் கொண்டிருந்ததால், கொங்கு மண்டலத்தில் எப்போதும், அ.தி.மு.க., வலு பெற்றிருந்தது. அவர் மறைவுக்குப்பின், அ.தி.மு.க.,வை இ.பி.எஸ்., கைப்பற்றி, 4 ஆண்டுகள் முதல்வராகவும் தொடர்ந்ததால், 'நமது சமூகத்துக்காரர் முதல்வராக உள்ளார்' என்ற அபிமானத்தில் அச்சமூக ஓட்டுக்கள், அ.தி.மு.க.,வால் தக்கவைக்கப்பட்டது.

அதேநேரம், பா.ஜ.,வினர் கொங்கு மண்டலத்தை குறி வைத்து காய் நகர்த்தியதாலும், கொ.ம.தே.க., மீதுள்ள அதிருப்தி, கொங்கு மண்டலத்துக்கு என இ.பி.எஸ்., பெரிய அளவில் திட்டங்களை வகுத்து கொடுக்காதது போன்ற காரணத்தால், அவ்விரு கட்சியில் உள்ள கொங்கு சமூக மக்கள், பா.ஜ., பக்கம் திரும்ப துவங்கினர்.

ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 36 சதவீதம் இச்சமூகமும், 24 முதல், 30 சதவீதம் வரை முதலியார் சமூகமும் உள்ளதால், கவுண்டர் சமூக ஓட்டுக்களை ஈர்ப்பதில் அ.தி.மு.க.,வும், பிரிந்து செல்லாமல் இருக்க கொ.ம.தே.க.,வும் தனி கவனம் செலுத்தின. ஆளும் கட்சியாக அ.தி.மு.க., இல்லாததாலும், கொ.ம.தே.க., மீதுள்ள அதிருப்தியாலும், பா.ஜ., பக்கமாக இச்சமூகத்தினர் நகர்ந்துள்ளனர்.

குறிப்பாக, அச்சமூகத்தை சேர்ந்த செல்வந்தர்கள், பெண்கள், இளம் வயதினர், பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் கவர்ந்து, அதிகளவில் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். தி.மு.க.,வில் அந்தளவு இச்சமூகம் வலுப்பெறாததாலும், அங்குள்ளவர்கள் கட்சி பிடிப்பில் இருந்து நழுவி பா.ஜ., பக்கம் சாயத்துவங்கியுள்ளனர்.

இது அ.தி.மு.க.,-தி.மு.க.,-கொ.ம.தே.க., கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாகிக்கி உள்ளது. இந்த தாக்கம் வரும் லோக்சபா தேர்தலில் வெளிச்சத்துக்கு வரும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்