சிட்டிங் எம்.பி.,க்களுக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன் : பா.ஜ., வியூகம் என்ன?
லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பதை அடிப்படையாக வைத்தே, பா.ஜ.,வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்தே, 43 'சிட்டிங்' எம்.பி.,க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, மத்தியில் ஆளும் பா.ஜ., தன் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி, 16 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள, 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த, 195 தொகுதிகளில், 155 தற்போது பா.ஜ., வசம் உள்ளது. இதன்படி பார்த்தால், முந்தைய தேர்தலில் போட்டியிட்ட 60 சதவீதம் பேருக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 43 சிட்டிங் எம்.பி.,க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்த வேட்பாளர்களில், 21 சதவீதம் பேருக்கு மறுவாய்ப்பு தரப்படவில்லை.
பிரவேஷ் வர்மா, ஹர்ஷ்வர்தன், மீனாட்சி லேகி, சாத்வி பிரக்யா, நரேந்திர சிங் தோமர், ரமேஷ் பிதுாரி ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். மொத்தம், 80 தொகுதிகள் உள்ள உத்தர பிரதேசத்தில், 51 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்; 47 பேருக்கு மறுவாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நான்கு தொகுதிகளுக்கு புதுமுகங்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில், 29 தொகுதிகளில், 24க்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இங்கு, ஏழு பேருக்கு மறுவாய்ப்பு தரப்படவில்லை. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 25 தொகுதிகளில், 15ல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்; 10 தொகுதிகளில் சிட்டிங் எம்.பி.,க்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சீட்
வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., குறைந்தபட்சம் 370 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி, 400க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இதன்படியே, வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே மீண்டும் சீட் தரப்படும் என்று கடந்த சில வாரங்களாக கூறப்பட்டு வந்தது.
எந்த விதத்திலும் எம்.பி.,க்கு எதிராகவோ, மாநிலத்தில் உள்ள பா.ஜ., அரசுக்கு எதிராகவோ எதிர்ப்பு மற்றும் அதிருப்தி இருக்கக்கூடாது என்பதே கட்சி தலைமையின் நோக்கமாகும். இதன்படியே, பல வழிகளில் ஆய்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு தொகுதி குறித்தும் அலசி ஆராயப்பட்டு, வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டு களாகவே, எம்.பி.,க்களிடம் அவர்களுடைய தொகுதி நிலவரம் குறித்து கேட்கப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து, எம்.பி.,யின் செயல்பாடு குறித்த தகவல்களும் திரட்டப்பட்டன. பா.ஜ.,வின் நமோ செயலி வாயிலாகவும் மக்களின் கருத்து கேட்கப்பட்டது. வெற்றி வாய்ப்பு என்ற அடிநாதத்தின் அடிப்படையிலேயே, வேட்பாளர் தேர்வு நடந்ததாக கட்சித் தலைமை கூறியுள்ளது.
வாசகர் கருத்து