தமிழகம் சந்தித்த லோக்சபா தேர்தல்கள் காங்கிரஸ் இருந்த அணிக்கே 17ல் 13 வெற்றி
இதுவரை நடந்த, 17 லோக்சபா தேர்தல்களில், 13ல் காங்கிரஸ் இடம் பெற்ற கூட்டணிக்கே, தமிழக மக்கள் ஓட்டளித்து உள்ளனர்.
இந்தியாவில், 1952 முதல் 2019 வரை, 17 லோக்சபா தேர்தல்கள் நடந்துள்ளன. 1952, 1957, 1962 ஆகிய முதல் மூன்று தேர்தல்களில், காங்கிரஸ் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைத்தன. ஆனால், தி.மு.க., முதல் முறையாக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த, 1967ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 36 தொகுதிகளில் வென்றது; காங்கிரசுக்கு மூன்று இடங்கள் மட்டுமே கிடைத்தன.
லால் பகதுார் சாஸ்திரி மறைவுக்குப் பின், இந்திரா தலைமையில் காங்கிரஸ் சந்தித்த முதல் தேர்தல் இது.கடந்த 1971ல் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அமைந்து, 38 இடங்களில் வென்றது. காமராஜரின் நிறுவன காங்கிரசுக்கு, ஒரே ஒரு இடம் தான் கிடைத்தது. நெருக்கடி நிலைக்குப் பின், 1977ல் நடந்த லோக்சபா தேர்தலில், நாடு முழுதும் காங்கிரஸ் தோல்வி அடைந்து, ஆட்சியை இழந்தது.ஆனாலும், அந்தத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு, 34 இடங்கள் கிடைத்தன. 1980ல் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, 37 இடங்களில் வென்றது; அ.தி.மு.க.,வுக்கு இரண்டு இடங்களே கிடைத்தன. பின், 1984, 1989, 1991ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில், அ.தி.மு.க., -- காங்கிரஸ்; 1996ல் தி.மு.க., -- த.மா.கா., கூட்டணிகள் வென்றன. தொடர்ந்து, 2004, 2009, 2019ல் தி.மு.க., - - காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்தன.
கடந்த 2014ல், 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க., 37ல் வென்றது. 1998ல் அ.தி.மு.க., -- பா.ஜ., அணி, 1999ல் தி.மு.க., -- பா.ஜ., அணியை, தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்தனர்.
இதுவரை நடந்த 17 லோக்சபா தேர்தல்களில், 1967, 1998, 1999, 2014 தவிர, மற்ற 13 தேர்தல்களில் காங்கிரஸ் இடம் பெற்ற கூட்டணிக்கே, தமிழக மக்கள் ஓட்டளித்துள்ளனர். 1952, 1957, 1962ல் நேரு, 1971, 1977, 1980ல் இந்திரா, 1984, 1991ல் ராஜிவ், 1998, 1999ல் வாஜ்பாய், 2009ல் மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமராக, தமிழக மக்கள் ஓட்டளித்துள்ளனர்.
கடந்த 2014ல் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய பா.ஜ., தலைமையிலான- தே.மு.தி.க., -- பா.ம.க., -- கூட்டணிக்கு, 18 சதவீத ஓட்டுகளும், இரண்டு இடங்களில் வெற்றியும் கிடைத்தது.
மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும்; யார் பிரதமராக வேண்டும் என்பதை முடிவு செய்து, அதற்கேற்பவே இதுவரை நடந்த தேர்தல்களில், தமிழக மக்கள் ஓட்டளித்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க., கூட்டணி சார்பிலும் யார் பிரதமர் என்பது சொல்லப்படவில்லை. பா.ஜ., மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி, தேர்தலை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து