சேலம் தொகுதியை கேட்டு பா.ம.க., அடம்: கூட்டணி உறுதியாவதில் இழுபறி
சேலம் தொகுதியை பா.ம.க.,வுக்கு விட்டுக் கொடுக்க அ.தி.மு.க., தலைமைக்கு விருப்பம் இல்லாததால், கூட்டணி உறுதியாவதில் இழுபறி நீடிக்கிறது.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படும், தே.மு.தி.க.,- பா.ம.க., ஆகிய கட்சிகள், பா.ஜ.,வுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஆனால் இக்கட்சிகளின் மாவட்ட செயலர்கள், அ.தி.மு.க., கூட்டணியையே விரும்புகின்றனர்.பா.ம.க.,- அ.தி.மு.க., இடையே நடந்த பேச்சுவார்த்தையில், தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி கேட்டு, பா.ம.க.,தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, சேலம் தொகுதியை தந்தால் மட்டுமே கூட்டணியை உறுதி செய்ய முடியும் என பா.ம.க., தொடர்ந்து அடம் பிடிப்பதால், இழுபறி நீடிக்கிறது.
ஆனால் அ.தி.மு.க., வின் கோட்டையான சேலம் தொகுதியை விட்டுக் கொடுக்க பழனிசாமி விரும்பவில்லை. மேலும், ஓமலுார் தொகுதி அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., மணியின் மைத்துனரை களம் இறக்க சம்மதம் தெரிவித்து, அதற்கான பணிகளையும் துவக்கிவிட்டார்.
இது குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த, சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்காக மேற்கு தொகுதியை விட்டுக் கொடுத்தோம். ஆனால், இந்த முறை இரண்டு கட்சிகளும் கூட்டணிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை, சேலம் தொகுதியை இழக்க தயாராக இல்லை. தலைமையும் அதில் உறுதியாக உள்ளதாக நம்புகிறோம்' என்றனர்.
பா.ம.க., நிர்வாகிகள் கூறுகையில், 'இந்த லோக்சபா தேர்தலில், பா.ம.க., கட்சி அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அதனால், குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது வென்றால் தான் கட்சியின் அங்கீகாரம் தொடரும்.
'அதற்காக தான் சேலம், தருமபுரி தொகுதிகளை அவசியம் கேட்டு பெறுவது என்ற முடிவுடன் தலைமை முயற்சி செய்கிறது. எக்காரணம் கொண்டும் இரு தொகுதிகளையும் விட்டுக் கொடுக்க, பா.ம.க., தயாராக இல்லை. சேலம், தருமபுரி தொகுதிகள் கிடைக்காவிட்டால் கூட்டணி, வெறும் பேச்சுவார்த்தையோடு முடிந்துவிடும்' என்றனர்.
வாசகர் கருத்து