எல்லா சாத்தியமும் உள்ள களம்!

இப்போது, எங்கே யார் சந்தித்து கொண்டாலும், அவர்களுக்குள் கேட்டுக்கொள்ளும் முதல் கேள்வியே, 'அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார்?' என்பது தான். ஆனால், பளிச்சென்று இதற்கொரு, பதிலை சொல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு, முதிர்ந்த பிரதான தலைவர்கள் இல்லாத தேர்தலாகவும், அலை என்பதே அறவே இல்லாத, ஒரு விசித்திர தேர்தலாகவும்,இந்தத் தேர்தல் உள்ளது.

இதன் நடுவே, தனக்கென ஒரு அலையை உருவாக்க, 'நாம் தமிழர்' கட்சி தலைவர் சீமான்,'ஒன்மேன் ஆர்மி'யாக பெரும்பாடு பட்டு வருவதை பார்க்கிறேன். மிக இலக்கியமாகவும்,இலட்சியமாகவும் பேசிடும் சீமான், தன் கட்சி வேட்பாளர்கள், 234 பேரையும், ஒரே மேடையில் அமர்த்தி அறிமுகம் செய்த பின், பேசிய அந்த ஒரு மணி நேரப் பேச்சு, உண்மையில் ஒரு சொல் வேள்வி! அந்த நாளில், அண்ணா, கருணாநிதி, ஈ.வெ.கி.சம்பத், குமரி அனந்தன், வாஜ்பாய் போன்றோர் காட்டிய, மேடை ஆளுமை போல, ஒரு பெரும் ஆளுமை. ஆனால், இந்த தலைவர்கள் மேல்நம்பிக்கை வைப்பதில், பெரிய தயக்கம் எவருக்கும் ஏற்பட்டதில்லை.


சீமான் விஷயத்தில், அது போன்ற நம்பிக்கை வைக்க முடியவில்லை. அதற்கு காரணமும் சீமானே! 'வாட்ஸ் ஆப்'பில் ஒரு வீடியோ, -அதில், சிவலிங்கத்தையும், பார்வதியையும், பிள்ளையாரையும், இம்மூவர் பெயரிலான புராணச் செய்திகளையும், ஒரு பெரியார் வழித் தொண்டனாக, பெரும் நாத்திகவாதியாக போட்டு பிரித்து மேய்கிறார் சீமான்.இது, எனக்கு ஆச்சரியமு மில்லை; அதிர்ச்சியுமில்லை. இருக்கின்ற ஒன்றையே, ஒருவர் இல்லை என்று கூறமுடியும். அதுவே, சிலர் வரையில் இல்லாமலும் போகக்கூடும்.


ஆனால், அதே சீமான், தஞ்சை பெருவுடையார் கோவிலுக்குச் சென்று, பெருவுடையார் முன்நின்று வணங்கிய ஒரு வீடியோ காட்சி, என்னைப் பதறச் செய்தது. இவரை திருந்திவிட்டார் என்றுகருதுவதா? இல்லை நடிக்கிறார் என்பதா புரியவில்லை. இதுபோன்ற, ஒரு மாறுபாடு அரசியலில் இவர் மட்டில் வராது என்று, எதை வைத்து நம்புவது? மற்றபடி இலவசமாக எதையும் தரமாட்டேன், அரிசி கிலோ, 500 ரூபாய்க்கு விற்றாலும், வாங்கும் சக்தி படைத்த பொருளாதாரத்தை உருவாக்குவேன் என்கிற, அவரின் கருத்து, 'அமேசிங்...!'


அடுத்து தன்னாலும், ஒரு அலையை உருவாக்க முடியுமா என்று, முயன்று பார்க்கிறார் கமல். சினிமா கவர்ச்சி காரணமாக, இவர் செலவு செய்ய தேவையின்றி, ஒரு கூட்டம் கூடுகிறது என்கின்றனர்; இருக்கலாம்! நடிப்பில், இன்னொரு நடிகர் திலகம் என்பதை கடந்து, இவரை ஒரு நல்லாட்சி தரமுடிந்தவர் என்று கருத, எது இருக்கிறது என்கிற கேள்வி எழுகிறது. பழ.கருப்பையா சொல்வது போல, வீட்டில் பெரிய நுாலகம் வைத்திருக்கிறார், நிறைய வாசிப்பவராகவும் இருக்கிறார் என்பது, எனக்கு போதுமானதாக தோன்றவில்லை.


இருந்த போதிலும், இரு திராவிட இயக்கங்களும் மாறி மாறி ஆண்டு, நாட்டையே ஒரு இலவச பூமியாக்கி விட்டன. இது, மாற வேண்டும்; மாற்ற வேண்டும் என்கிற, இவரின் கருத்தும் முனைப்பும் பாராட்டுக்குரியதே. ஆனாலும், ஒரு சில தெரிந்த முகங்களை கடந்து, இவர் கட்சியில் எல்லோருமே அரசியலுக்கு புதியவர்கள் என்பதால், எடை போடமுடியவில்லை.இக்கருத்து, சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும்.

அடுத்து பெரிதாக பார்க்கப்பட வேண்டியவர் விஜயகாந்த். உள்ளம் துாய்மை என்ற நல்ல பெயருடன், ஜெயலலிதாவையே எதிர்த்தவர் என்ற திண்மை, இவருக்கு இருந்த போதிலும், இவரது நலிந்த உடல்நலம் கட்சியையும் பாதித்து விட்டது என்பதே உண்மை. பழைய கம்பீரத்துடன், இவர் பேசும் நாளில் தான், தே.மு.தி.க.,விற்கு புத்துயிர் வரும்.


நான்காவதாக துடிப்புடன் தெரிபவர் தினகரன். ஆனால், இவரின் அ.ம.மு.க., மக்களின் தேவையில், பிறந்த ஒரு கட்சியாகவே தெரியவில்லை. அ.தி.மு.க.,வின் விரிசலில் உதிர்ந்த, ஒரு துண்டு பகுதியாகவே, அது காட்சி தருகிறது. நல்லாட்சி தருவோம், அணை கட்டித் தருவோம், பாலங்கள் கட்டுவோம் என்ற, ஆக்கப்பூர்வங்களை விட, இ.பி.எஸ்.,சுக்கு பாடம் புகட்டுவோம், அ.தி.மு.க.,வை திரும்ப மீட்போம் என்று, சொத்தை இழந்தவன், அதற்காக போராடுவது போலவே பேசுகிறார் தினகரன். அதனாலோ என்னவோ, இவராலும் ஒரு அலை உருவாகவில்லை. இனி, உருவாகப் போவதுமில்லை.


இவர்கள் நால்வரையும் விட்டால், மீதமிருப்பது இரு திராவிட கட்சிகள் தான். ஏனைய பல உதிரி கட்சிகளும், இவர்கள் இருவருடன் கூட்டணி கண்டு இவர்களுக்குள் கலந்து விட்டன. இவர்கள் இருவரையும், வெளியே இருந்து ஒருவர் மெனக்கெட்டு விமர்சிக்க தேவையேயில்லை. இவர்கள் ஒருவருக்கு ஒருவர் வைக்கும்,விமர்சனங்களே போதுமானது.


'ஊழல், ரவுடியிசம், நில அபகரிப்பு, மின் தட்டுப்பாடு, பர்த் சர்ட்டிபிகேட்டிலும் லஞ்சம்' என, தி.மு.க.,வை நோக்கி, அ.தி.மு.க., குற்றச்சாட்டுகளை அடுக்கினால், 'சுயசார்பின்மை, உடனிருப்பவருக்கே துரோகம், பொறுப்பற்ற அரசியல், எல்லாவற்றிலும் கமிஷன், ஊதாரித்தனம்' என, இவர்கள் மீது, தி.மு.க., பாணங்களைத் தொடுக்கிறது. எதையும் நாம் போகட்டும் என்று, தள்ளி விட முடியாது. எல்லா குற்றச்சாட்டுகளிலும், துளியாவது உண்மை இருக்கவே செய்கிறது.'அரசியல் என்றாலே இதெல்லாம் சகஜமப்பா' என்ற, கவுண்டமணி டயலாக்கை, சோகமான இவ்வேளையில் காமெடியாகச் சொல்லி கடக்க வேண்டி உள்ளது. இப்படி அலுத்து கொண்டால் எப்படி?


நம் முதல்வர் இ.பி.எஸ்., இப்படி தாக்குப்பிடிப்பார் என்றோ, அணுக எளியவராக இருப்பார் என்றோ, மீடியாக்கள் முன்னால் பிளந்து கட்டுவார் என்றோ, யாராவது நினைத்திருப்போமா? இதை எண்ணிப் பாருங்களேன் என்கின்றனர் சிலர்.


அதற்கும் மேலாக, இவர் ஆட்சியில் வறட்சி இல்லை; மேட்டூர் அணை பல முறை நிரம்பி விட்டது, புயல் வெள்ளம், கொரோனா போன்ற இடர்காலங்களில், என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதைச் செய்தவராக, இவர் இருப்பதையும் எண்ணிப் பாருங்கள் என்கின்றனர். மக்களில் பெரும்பான்மையோர், இக்கருத்தை ஆதரிக்கவும் செய்கின்றனர். ஆனாலும், அ.தி.மு.க., 'ஹாட்ரிக்' அடித்து, அடுத்து ஆட்சியை பிடிக்குமா என்றால், அப்படி ஒரு வரலாறு, இதற்கு முன் இல்லை என்ற உதாரணம் முன்நின்று மிரட்டுகிறது.


ஊடகங்கள் வழக்கம் போல, சர்வேக்களை நடத்தி, தி.மு.க.,வுக்கே வாய்ப்பு அதிகம் என்கின்றன. இப்படி சொல்கின்ற எந்த ஒரு ஊடகமும், நடுநிலையானது என்று கூறமுடியாது. ஆகையால், அதை ஏற்பதிலும் ஒரு நெருடல் இருக்கவே செய்கிறது.


மொத்தத்தில், ஆறறிவு படைத்த நமக்கான ஒரு சவால் நாளாகவே, ஏப்ரல், 6 இருக்கிறது. இரு பெரும் கட்சிகளில் ஒன்றையே, மே, 2 அடையாளம் காட்டக்கூடும். அப்படி காட்டமுடியாமல், ஒரு தொங்கு சட்டசபை அமையவும் வாய்ப்பு உண்டு. அது துவண்டு போய் கவிழ்ந்து, இந்த ஆண்டு இறுதியில், இன்னொரு தேர்தலும் வரலாம். இப்படி எல்லா சாத்தியங்களும் உடைய ஒரு களமாகவே, இப்போதைய தேர்தல் களம் திகழ்கிறது. பொறுத்திருந்து தான் பார்ப்போமே!

இந்திரா சவுந்தர்ராஜன்
எழுத்தாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)