தலைமை அறிவித்தால் போட்டியிட தயார்: அண்ணாமலை

"தாத்தா, அப்பா பெயரை வைத்து எம்.எல்.ஏ., ஆனவர் உதயநிதி. பிரதமரின் கால் தூசிக்கு கூட அவர் சமம் கிடையாது" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ., தலைமை இன்று அல்லது இன்னும் ஓரிரு நாளில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோவை அல்லது கரூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
இந்த தகவல் எங்கிருந்து, யார் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. பா.ஜ.,வை பொறுத்தவரை எந்த பணியை கொடுக்கிறார்களோ, அதை செய்கிறேன். பா.ஜ.,வில் எனக்கு மாநில தலைவர் என்ற பொறுப்பை தந்துள்ளனர், அந்தப் பணியை நான் செய்து வருகிறேன். கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ, அதை செய்வதற்கு தயாராக இருக்கிறேன். பா.ஜ., வை பொருத்தவரை மக்கள் சேவை தான் முதன்மையானது.
எனக்கு தனிப்பட்ட விருப்பம் வெறுப்பு எதுவும் இல்லை. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சமமாக வேலை பார்த்துள்ளேன். இதுவரை நான் கட்சியிடம் எதையும் கேட்கவில்லை. தலைமை முடிவெடுத்தால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன். அதில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜ., தலைமை யாரை நிறுத்தப்போகிறார்கள் எனத் தெரியாது. கட்சி வளர்ந்துள்ளது என்பது லோக்சபா தேர்தல் முடிவுகளில் தெரியும். மோடியின் கால் நகத்தில் உள்ள தூசிக்கு கூட உதயநிதி சமம் கிடையாது. அவருடைய அப்பா, தாத்தாவை வைத்து அரசியலுக்கு வந்து எம்.எல்.ஏ., அமைச்சரானார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து