பா.ஜ.,வில் யார் யார் போட்டி: நள்ளிரவை கடந்தும் நீடித்த ஆலோசனை
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு குறித்து, அக்கட்சியின் மத்திய தேர்தல் குழுவினருடன் பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை ஆலோசனை நடத்தினார்.
லோக்சபாவுக்கு வரும் ஏப்ரல் மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் பா.ஜ., முயற்சி செய்கிறது.
அதன் ஒரு பகுதியாக, அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட பா.ஜ., திட்டமிட்டு வருகிறது. 100 பேர் கொண்ட இந்த பட்டியலில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்களின் பெயர்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பா.ஜ.,வின் மத்திய தேர்தல் குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். நேற்று நள்ளிரவு 10:30 மணிக்கு துவங்கிய இந்த ஆலோசனை அதிகாலை 2: 30 மணிக்கும் மேல் நீடித்தது. இந்த ஆலோசனையில், பா.ஜ., தலைவர் நட்டா, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்றனர்.
மேலும் இந்த கூட்டத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மஹா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர சிங் படேல், ம.பி., முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் தமி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனால், பா.ஜ.,வின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து