"தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் மெகா கூட்டணி" -ஹெச்.ராஜா பேட்டி
"தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்" என பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா பேசியதாவது:
தமிழக பட்ஜெட்டை பொறுத்தவரையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஸ்டிக்கர் ஒட்டும் பணியை சிறப்பாக செய்துள்ளார். எந்த திட்டங்களை இந்த அரசு கொண்டு வந்துள்ளது? பிரதம மந்திரியின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம், பேரூராட்சிகளில் அமல்படுத்தப்பட்டு வீடுகளைக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், கருணாநிதி வீடு வழங்கம் திட்டம் என்ற பெயரில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அடுத்ததாக, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை.
2024ம் ஆண்டுக்கு மட்டும் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் தி.மு.க. அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறது. இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களுக்கு உதவாத இந்த அரசை உதறித்தள்ளும் காலம் விரைவில் வரும்.
தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சீட் விவரங்கள் குறித்தும் பேசுவதற்கு அகில இந்திய அளவில் பார்லிமென்ட் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவர்கள் தான் கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து